உலகம் எங்கும் ஏஐ எதிலும் ஏஐ என்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒரு சில ஐடி நிறுவனங்கள் மனிதர்களுக்கு நிகரான ஏஐ ஏஜென்ட்களைப் பயன்படுத்தி வருகின்றன. எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகமானாலும் சீனா அதில் ஒரு படி மேலிருக்கும். அப்படித்தான் தற்போது சீன தொழிற்சாலைகளில் மனிதர்களுக்கு மாற்றாக அதிக அளவில் ரோபோக்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சீனா தொழிற்சாலைகளில் அனைத்தும் தானியங்கி மயமாக்கப்பட்டு வருவதால் சில தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். அதிலும் சீனாவின் சில பகுதிகளில் வேலை வாய்ப்பின்மை தலை விரித்து ஆடத் தொடங்கியுள்ளது. ஷாங்காய்க்கு அருகில் உள்ள மிக முக்கியமான உற்பத்தி நகரம் தான் குன்ஷான்.
முன்னணி பிராண்டுகளின் லேப்டாப்கள் மற்றும் டிஜிட்டல் டிவைஸ்கள் இந்த நகரத்தில் தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த நகரத்திற்கு புலம்பெயர்ந்தால் ஒரு வேலை வாய்ப்பை பெற்று விடலாம் என்றிருந்த நிலை வேகமாக மாறி வருகிறது.

ரோபோக்களின் வருகையால் குறைந்த திறன் கொண்ட ஊழியர்களுக்கும் மாத வருமானத்தை வழங்கி வந்த தொழிற்சாலை வேலைகள் குறைந்து வருகின்றன. இதனால் சம்பளத்திற்கு பணிபுரிந்து வந்த பல தொழிலாளர்கள் கூலி வேலையாவது கிடைக்குமா என காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.
நியூயார்க் டைம்ஸ், சீன நிறுவனங்கள் தங்களுடைய செலவுகளை குறைப்பதற்காக ஆட்டோமேஷனில் அதிகம் முதலீடு செய்து வருவதாக தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்னர் உற்பத்தி செய்யப்படும் எலக்ட்ரானிக் டிவைஸ்கள் மற்றும் இயந்திரங்களில் ஸ்க்ரூ பொருத்துவது, எலக்ட்ரானிக் பாகங்களை எல்லாம் ஒன்றிணைப்பது போன்ற வேலையை மனிதர்களே செய்து வந்தனர்.
ஆனால் அதற்கு மாற்றாக இப்போது இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சில நிறுவனங்களில் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்த நிறுவனங்களில் பணி புரியும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து அதற்கு மாறாக ரோபோக்கள் வேலை செய்கின்றன.
ரோபோக்களின் வரத்தால் வேலை இழந்த ஊழியர்கள் செக்யூரிட்டி வேலையாவது கிடைக்குமா என்று தேடி அலைந்து வருகின்றனர். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சீன உற்பத்தி துறையில் 4 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இந்த ஊழியர்களுக்கு நிலையான சம்பளமோ அல்லது சலுகைகளோ தங்களின் திறன்களை அதிகரித்து கொள்வதற்கான வாய்ப்போ கிடைக்கவில்லை
தொழில்நுட்ப வளர்ச்சி பாராட்டத்தக்கது என்றாலும், அதன் பின்னணியில் இவ்வளவு நாட்களாக உழைத்து கஷ்டப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஒரு நாள் சம்பளமே கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் வரும் நாட்களில் இந்த மாற்றம் இன்னும் அதிகமாகி அதிகளவு ரோபோ பயன்பாட்டை நாம் கண் கூட பார்க்க போகிறோம் என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications
