ஐடி துறை என்பது இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார துறைகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் வளர்ச்சியிலும் உலகளாவிய டிஜிட்டல் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வழங்கும் துறையாகவும் விளங்கி வருகிறது.
அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Tata Consultancy Services (TCS) செயல் துணைத் தலைவர் மற்றும் தலைமை மனித வள அதிகாரியான மிலிந்த் லக்கட், ஜூலை 10ஆம் தேதியான நேற்று செய்தியாளர்களை சந்தித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், "ஊதிய உயர்வு தொடர்பான எந்தவொரு முடிவும் இப்போது வரை எடுக்கப்படவில்லை" என்று தெரிவித்தார். இதன் மூலம், TCS நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வரும் நாட்களில் ஊதிய உயர்வு கிடைக்குமா இல்லையா என்பது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவும் இதுவரை எடுக்கவில்லை என தெரிகிறது.

மிலிந்த் லக்கட் கூறுகையில், "தற்போதைய நிலைமை மிகவும் உறுதியற்றதாக உள்ளது. எனவே, ஊதிய உயர்வு எப்போது வழங்கப்படும் என்பது இப்போது சொல்ல முடியாது. நிறுவனத்தின் வணிக வளர்ச்சி எப்படி நடைபெறுகிறது என்பதைப் பார்த்துத்தான் முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். அதாவது, தற்போதைய பொருளாதார சூழல் அல்லது வணிக நிலைமை தெளிவாக இல்லாததால், ஊதிய உயர்வு பற்றிய முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், நிறுவனம் சந்திக்கும் சவால்கள் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
2025-26ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் - ஜூன்) முடிவுகளை வெளியிட்ட டிசிஎஸ் நிறுவனம், ஊழியர் விலகல் விகிதத்தில் சிறிய அளவிலான உயர்வை பதிவு செய்துள்ளது. Q1 முடிவுகளின் படி, கடந்த 12 மாதங்களை (LTM) அடிப்படையாகக் கொண்டால், ஊழியர்களின் விலகல் விகிதம் 13.8% ஆக இருந்தது. இது, 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டின் முடிவில் இருந்த 13.3%-ஐ விட அதிகம் ஆகும்.
மேலும், 2025-26 முதல் காலாண்டில், கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் (ஏப்ரல் - ஜூன் 2024) ஒப்பிடுகையில் விலகல் விகிதத்தில் சிறிய அளவிலான உயர்வு ஏற்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உயர்வுக்கான காரணங்கள் குறித்து நிறுவனம் விரைவில் விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக TCS நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்கட் கூறுகையில், "13% என்ற அளவு தான் எங்களுக்கேற்ற ஓர் நிலை. தற்போதைய விகிதம் அதைவிட அதிகமாக உள்ளது. அதை குறைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். விலகல் விகிதம் உயர்ந்த போதிலும், டிசிஎஸ் நிறுவனம் தனது மொத்த பணியாளர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. 2025-26 முதல் காலாண்டில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட புதிய பணியாளர்களை டிசிஎஸ் நிறுவனம் நியமித்துள்ளது. அதாவது, டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை தற்போது 6,13,069ஆக உள்ளது. இது கடந்த காலாண்டில் இருந்த 6,07,979 என்ற எண்ணிக்கையைவிட அதிகம் ஆகும்.
இந்தியப் பொருளாதாரத்தில், தகவல் தொழில்நுட்ப சேவைத் துறை (IT Services Sector) மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்குநராகவும், முக்கிய வருமான மூலமாகவும் திகழ்கிறது. இத்துறை, நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. 2021-22 நிதியாண்டில், இந்திய ஐடி துறையின் மொத்த மதிப்பு $227 பில்லியன் ஆக இருந்தது. இது, ஆண்டுக்கு 15.5% வளர்ச்சி ஆகும். 2022-23 (FY23) நிதியாண்டில், ஐடி துறையின் மதிப்பு $245 பில்லியன் வரை வளர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டின் தொடக்கத்தில் வெளியான தொழில்துறை அறிக்கையின்படி, இந்திய மென்பொருள் தயாரிப்பு தொழில் (Software Product Industry) 2025 முடிவடைவதற்குள் $100 பில்லியன் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக, இந்திய நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் தங்களை விரிவுபடுத்தும் நோக்கில் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் திட்டங்களை முன்னெடுத்துள்ளன.
அதாவது, 2026ஆம் ஆண்டுக்குள் ஐடி துறையில் 1.4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) $380 பில்லியன் வரையிலான பங்களிப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய ஐடி துறையின் வளர்ச்சி மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் அதன் வலிமையான தாக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.


Click it and Unblock the Notifications