வருஷம் வருஷம் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டு இருக்கிறது. நாமும் அதனை ஆர்வமாக பார்த்து வருகிறோம். ஆனால், வளர்ச்சி, சமூகநலன் மற்றும் உள்கட்டமைப்புக்காக அரசாங்கம் செலவிடும் பணத்தை அது எங்கு இருந்து பெறுகிறது என்பது குறித்து நம்மில் பெரும்பாலானோர் சிந்தித்து இருக்க மாட்டோம். இப்பம், மத்திய அரசுக்கு எப்படி வருமானம் வருகிறது, அந்த பணத்தை எங்கு ஒதுக்கீடு செய்கிறது. மேலும் இது நம்மையும், பொருளாதாரத்தையும் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பட்ஜெட்டை புரிந்து கொள்வது, பொருளாதார நிபுணர்கள் அல்லது கொள்கை வகுப்பாளர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அவசியம். ஏனென்றால், நாம் வரி செலுத்தும்போது அல்லது பொருட்களை வாங்கும்போது, அரசாங்கத்தின் வருவாய் பங்களிக்கிறோம். அதேபோல், உள்கட்டமைப்பு முதல் நலத்திட்டங்கள் வரை நாம் பெறும் பொது சேவைகளின் தரம் இந்த ரூபாய் எவ்வாறு ஒதுக்கப்படுகிறது என்பதை பொறுத்துதான் அமைகிறது.

வருமானம்
வரிகள், கடன் மற்றும் வரி அல்லாத வரிகள் வாயிலாக மத்திய அரசுக்கு வருமானம் வருகிறது. மத்திய அரசின் மொத்த வருமானத்தில் 3ல் 2 பங்கு வரிகள் வாயிலாக கிடைக்கிறது. அதிலும் மத்திய அரசின் வருவாயில் வருமான வரி மற்றும் நிறுவன வரியின் பங்கு 3ல் 1 பங்காக உள்ளது. 2022-25 பட்ஜெட்டுகளின் அடிப்படையில், மத்திய அரசுக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயிலும், வருவாய் ஆதாரங்களின் தோரயமான பங்களிப்பை பார்ப்போம்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஒவ்வொரு ரூபாயிலும் 15-20 பைசாவைக் கொண்டுள்ளது. சுங்க மற்றும் கலால் வரிகள் பங்கு 10 காசுகளாவும், டிவிடெண்டுகள் மற்றும் அரசு சேவைகளுக்கான கட்டணங்கள் போன்ற வரி அல்லாத வருவாய் பங்கு 6-9 பைசாகாவும் உள்ளது. அரசு வாங்கும் கடன் மற்றும் பிற பொறுப்புகள் வாயிலாக கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் மூன்றில் ஒரு பங்கினை கொண்டுள்ளது. அதாவது சுமார் 34 காசுகள் என்று வைத்துக் கொள்ளலாம்.
செலவுகள்
மத்திய அரசு தனது வருமானத்தை கடந்த கால கடன்களுக்கான வட்டி செலுத்துதல் முதல் வளர்ச்சி திட்டங்களில் முதலீடு செய்தல் வரை செலவிடுகிறது. மத்திய அரசின் ஒவ்வொரு ரூபாய் செலவிலும் எது எவ்வளவு பங்கினை கொண்டுள்ளது என்பதை பார்க்கலாம். ஒவ்வொரு ரூபாயிலும் 20 காசுகள் கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக செல்கிறது. மாநில அரசுகளுக்கு அவர்களது வரி பங்குக்காக 20-25 காசுகள் மத்திய அரசு கொடுக்கிறது. மத்திய அரசின் தனது திட்டங்களுக்காக 15-50 காசுகளை செலவிடுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு திட்டங்களுக்கு 8 முதல் 10 காசுகள் போகிறது.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ராணுவத்தை பராமரிப்பதற்காக 8-10 காசுகள் செலவிடுகிறது. உணவு, உரங்கள் மற்றும் எரிபொருளுக்கான மானியத்துக்காக 6-8 காசுகள் செலவாகிறது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்காக 4-5 காசுகள் வழங்குகிறது. பேரிடர் நிவாரணம், நிர்வாக செலவுகள் போன்ற இதர செலவுகளுக்காக மொத்தமாக 8 முதல் 10 காசுகளை மத்திய அரசு செலவிடுகிறது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications