ஏர்போர்ட்ல போயிட்டு ஒரு டீ குடிக்கலாம்னு பார்த்தா.. அந்த டீ விலையை பார்த்துட்டு அந்த ஆசையே அடங்கிப்போகும். அப்படின்னு புலம்புறவங்களுக்கு மத்திய அரசு ஒரு செம ட்ரீட் கொடுத்திருக்கு. இனி ஏர்போர்ட் போனா தைரியமா பர்ஸில் இருந்து சில்லறைய எடுக்கலாம். ஏன்னா வெறும் 10 ரூபாய்க்கு சூடா ஒரு டீ, 20 ரூபாய்க்கு மொறுமொறு சமோசா கொடுக்க வந்துருச்சு உடான் யாத்ரி கஃபே. இது ஏதோ ஒரு இடத்தில் மட்டும் இல்ல, 24 ஏர்போர்ட்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு இருக்கு. உண்மையில் இது மிக நல்ல விஷயம் தான். ஆனால் இதில் நம்ம சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஏர்போர்ட்கள் இருக்கா?
உண்மையில் உடான் யாத்ரி கஃபே சாமானிய மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் தான். ஏனெனில் விமான நிலையம் என்றாலே விலை அதிகம். அங்கு வசதியானவர்களுக்கு ஏற்ற வகையில் தான் இருக்கும் என்ற பிம்பத்தை உடைத்துள்ளது.

மத்திய அரசின் உடான் திட்டத்தின் நோக்கமே சாமானியர்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்பது தான். குறைந்த கட்டணத்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்கள், விமான நிலையில் ஒரு காபி குடிக்க 200 - 300 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். இது பலரையும் தயக்கத்தில் ஆழ்த்தி வந்தது. ஆனால் இனி அந்த தயக்கம் தேவையில்லை. விமான நிலையத்தில் 10 ரூபாய்க்கு டீயும், 20 ரூபாய்க்கு சமோசாவும் கிடைக்கும்.
நாடு முழுவதும் உள்ள 24 விமான நிலையங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த உடான் யாத்ரி கஃபே திட்டம், பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும். விமான நிலையங்கள் நவீனமயமாக்குவதுடன், சாதாரண மக்களும் விமான பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்த வரையில் சென்னை, கோயம்புத்தூர், மற்ற மாநிலங்களில் கொல்கத்தா, ஹைதராபாத், விஜயவாடா, ஹோலோங்கி (அருணாச்சல பிரதேசம்), அகமதாபாத், புனே, சூரத், மும்பை, புவனேஸ்வர், திருவனந்தபுரம், மங்களூரு, ராஜ்கோட், சண்டிகர், ஜம்மு, பாட்னா, இந்தூர், அமிர்தசரஸ், வாரணாசி, குவாலியர், அகர்தலா, ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ போன்ற விமான நிலையங்களில் இந்த உடான் சேவையானது கிடைக்கும்.
இது குறித்து மக்களவையில் சிவில் போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல், பயணிகளின் மலிவு விலை உணவு தேவையை நிவர்த்தி செய்ய பொது தனியார் பங்களிப்பு மாதிரியில் இயங்கும் விமான நிலையங்கள் உட்பட பல இடங்களில் உடன் யாத்ரி கஃபே போன்ற குறைந்த விலை உணவகங்களில் தொடங்கப்பட்டுள்ளன. மற்ற விமான நிலையங்களில் இத்தகைய உணவகங்களை அமைப்பது என்பது அந்தந்த விமான நிலைய நிர்வாகிகளின் முடிவைப் பொறுத்தது என்றும் தெரிவித்துள்ளார்.
இங்கு வாட்டர் பாட்டில் 10 ரூபாய், டீ 10 ரூபாய், காஃபி 20 ரூபாய், சமோசா 20 ரூபாய், ஸ்வீட் ஆப் தி டே 20 ரூபாய் என்றும் PIB தரவானது சுட்டிக் காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications