டெல்லி: இந்தியாவில் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்கள் ஐடி துறையில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை தருபவையாக இருக்கின்றன. இந்நிலையில் டெல்லியை அடிப்படையாகக் கொண்ட ஒரு மென்பொருள் பொறியாளர் தன்னுடைய பணிக்காக எந்த நகரத்திற்கு தான் இடம் மாறுவது சரியாக இருக்கும் என ரெடிட் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரெடிட் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எனக்கு மூன்று ஆண்டுகள் ஐடி துறையில் பணி அனுபவம் இருக்கிறது. நான் தற்போது டெல்லியில் இருந்து வேறு நகரத்திற்கு செல்ல விரும்புகிறேன். புனே, பெங்களூரு , ஹைதராபாத் இந்த மூன்று நகரங்களில் எது பொருத்தமானதாக இருக்கும்? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலை வாய்ப்பு ரீதியாக எந்த நகரம் வளர்ச்சியை ஏற்படுத்தி தரும் என்றும் அவர் கேட்டுள்ளார். அவருடைய இந்த கேள்விக்கு இந்த நகரங்களில் பணிபுரியக்கூடிய தொழில்நுட்ப நிபுணர்கள் பலரும் பதில்களை குவித்துள்ளனர்.
நகரங்களின் உள்கட்டமைப்பு ,வேலை வாய்ப்பு ,வாழ்க்கை செலவினம் மற்றும் சமூக வாழ்க்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர். ஒரு பயனர் ஹைதராபாத் பொருத்தமானதாக இருக்கும் என கூறியுள்ளார்.
இதற்கு முன்பு நான் புனேவிலும் பெங்களூரிலும் வசித்து இருக்கிறேன். ஆனால் இந்த இரண்டு நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் சாலை உள்கட்டமைப்பு மோசமானதாகவும் இருக்கும், ஹைதராபாத்தில் இந்த பிரச்சனை இருக்காது என தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர் ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய இரண்டு நகரங்களிலுமே வாழ்க்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என கூறியுள்ளார். புனேவில் போக்குவரத்து பிரச்சினை சற்றே அதிகம் இருந்தாலும் வார இறுதி நாட்களில் வெளியே செல்லும் நபராக இருந்தால் உங்களுக்கு புனே சிறந்த நகரமாக இருக்கும் என கூறியுள்ளார்.
ஒரு பயனர் புனே தான் சிறந்த நகரம் இங்கே நான் ஒன்றரை ஆண்டுகளாக பணி செய்து வருகிறேன் இதுவரை எனக்கு எந்த ஒரு எதிர்மறையான அனுபவமும் கிடைக்கவில்லை இங்குள்ள மக்களும் நம்மிடம் நல்ல முறையில் பழகுகிறார்கள் என்பதால் உங்களுக்கு வீட்டை விட்டு வந்து தனியாக இருக்கிறோமே என்ற எண்ணம் இருக்காது எனக் கூறியுள்ளார்.
நிறுவனங்கள் அடிப்படையில் பார்க்கும்போது பெங்களூர் முதலிடத்திலும் ஹைதராபாத் இரண்டாவது இடத்திலும் புனே மூன்றாவது இடத்திலும் இருக்கிறது என ஒருவர் கூறியுள்ளார் . அன்றாட வாழ்க்கை செலவினத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது புனே முதலிடத்திலும் ஹைதராபாத் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது மூன்றாவது இடத்தில் பெங்களூர் என கூறியுள்ளார். உள்கட்டமைப்பு அடிப்படையில் பார்த்தால் ஹைதராபாத்திற்கு தான் முதலிடம் என தெரிவித்துள்ளார்.
இதில் பெரும்பாலானவர்கள் வேலைவாய்ப்பு என வரும்போது பெங்களூர் தான் சிறந்த நகரம் என கூறுகின்றனர். அதே வேளையில் போக்குவரத்து பிரச்சனை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் ஹைதராபாத் சிறந்த நகரம் என்றும் வார இறுதி நாட்களில் வெளியே செல்ல வேண்டும் என எண்ணுபவர்கள் மற்றும் குறைந்த வாழ்க்கை செலவினங்களை கொண்டவர்கள் புனே நகரத்திற்கு செல்லலாம் என கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications