அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கு அமெரிக்காவில் பிறப்பால் கிடைக்கும் குடியுரிமை இனிமேல் கிடைக்காது என அறிவித்திருப்பது பெரிய விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
கடந்த மாதம் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். தான் பதவியேற்ற உடனே பல்வேறு உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார். அதில் முக்கியமானது பிறப்பால் கிடைக்கும் குடியுரிமை ரத்து என்பதாகும். இதன்படி அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் அமெரிக்க குடிமக்களாக இருந்தால் மட்டுமே அவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவார்கள்.

பெற்றோர் வெளிநாட்டவர்கள் என்றால் அவர்களின் குழந்தைகளுக்கு இதுநாள் வரை கிடைத்த குடியுரிமை பிப்ரவரி 20ஆம் தேதி முதல் கிடைக்காது. இதனால் அமெரிக்காவில் குடியேறி இருக்கும் தம்பதிகள் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர்.
இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு மாநிலங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இதுவரை இரண்டு மாநிலங்களில் வந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் எல்லைக்குள் பிறக்கும் எந்த ஒரு குழந்தைக்கும் அவர்களுடைய பெற்றோர் அந்த நாட்டவர்களாக இருந்தாலும் அல்லது வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த மண்ணில் பிறந்த ஒரே காரணத்திற்காக அந்த குழந்தைகள் அந்த நாட்டின் குடிமகன்களாக இருப்பர். இதுவே பிறப்பால் கிடைக்கும் குடியுரிமை எனப்படுகிறது.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேலாக பிறப்பால் கிடைக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. 1868 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டு வந்த 14-வது திருத்தத்தின்படி தான் அமெரிக்க மண்ணில் பிறக்கும் எந்த ஒரு குழந்தையும் அமெரிக்க குடிமகன்களாகவே இருப்பர் என கூறுகிறது.
அமெரிக்காவில் உள்நாட்டு போரை தொடர்ந்து தான் இந்த 14வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவில் இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்களின் குழந்தைகள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாக மாறினர்.
உலகில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் இவ்வாறு பிறப்பால் குடியுரிமை வழங்கப்படுகிறது என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம். உலகில் சுமார் 33 நாடுகள் இவ்வாறு பிறப்பால் கிடைக்கும் குடியுரிமைகளை வழங்குகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க கண்டத்திற்குள் இருக்கும் நாடுகளாக இருக்கின்றன.
அர்ஜென்டினா, பார்படாஸ், பொலிவியா, பிரேசில், கனடா ,சிலி, கோஸ்டா ரிகா, கியூபா, டோமினிக்கா ஆகிய நாடுகள் அந்த மண்ணில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் வெளிநாட்டவர்களாக இருந்தாலும் அந்த குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்குகின்றன. அதேபோல ஈக்வடார், கௌதமாலா, மெக்சிகோ, பனாமா, பெரு , வெனிசுவேலா, உருகுவே உள்ளிட்ட நாடுகளும் பிறப்பால் குடியுரிமை வழங்குகின்றன. ஆசிய நாடுகளில் எல்லாம் இவ்வாறு பிறப்பால் கிடைக்கும் குடியுரிமை வழங்கப்படுவது கிடையாது.


Click it and Unblock the Notifications