மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) தொழில்நுட்பம் பணியிடங்களை எவ்வாறு மாற்றும் என்பதைப் பற்றி புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில், எதிர்கால வேலைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மைக்ரோசாஃப்டின் Copilot எனும் ஏஐ உதவியாளருடன் அமெரிக்காவில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட உரையாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில், எந்த தொழில்கள் ஏஐ-யால் அதிகமாக பாதிக்கப்படக்கூடும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அதாவது, தகவல்களை செயலாக்குவது (processing), தகவல்களை பகுப்பாய்வு செய்வது (analysis), தகவல்களை மற்றவர்களிடம் உரையாடி பகிர்வது (communication) போன்ற செயல்களில் அதிகமாக ஈடுபடும் வேலைகளே, ஏஐயால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவை என தெரியவந்துள்ளது.
ஆலோசகர் (consultant), மத்திய நிலை நிர்வாகி, தகவல் பகுப்பாய்வாளர், மின்னஞ்சல் அல்லது அறிக்கை எழுதுபவர்கள், மீட்டிங் தயாரிப்பாளர்கள் போன்ற தொழில்கள் ஏற்கனவே Copilot போன்ற ஏஐ கருவிகளால் மாற்றத்துக்குள்ளாக ஆரம்பித்துவிட்டன. இத்தகைய வளர்ச்சி தொழில்நுட்பத்தின் மூலம் வேலைவாய்ப்புகள் முற்றிலுமாக மறைந்துவிடுமா? அல்லது புதிய வேலைகள் உருவாகுமா என்பதைக் குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.
அதேபோல் மொழிபெயர்ப்பாளர்கள், வரலாற்றாளர்கள், பயணிகள் சேவை உதவியாளர்கள், சேவை மற்றும் விற்பனை பிரதிநிதிகள், எழுத்தாளர்கள் மற்றும் நூலாசிரியர்கள், வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகள், CNC கருவி நிரலாளர்கள் (தானியங்கி இயந்திரங்கள்), தொலைபேசி ஆபரேட்டர்கள் ஆகிய துறைகள் ஏஐ-யால் கடுமையாக பாதிக்கப்படும் என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஜெனரேட்டிவ் ஏஐ கருவிகள், இவையெல்லாம் தானாக செய்வதற்கான திறனை தற்போது பெற்றுவிட்டதால், இந்த வேலைகளில் மாற்றம் மிக விரைவில் ஏற்படும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அதேபோல், டிக்கெட் ஏஜென்ட்கள், வானொலி தொகுப்பாளர்கள் (Radio Hosts), தொலைபேசி விற்பனையாளர் (Telemarketers), செய்தி பகுப்பாய்வாளர்கள் (News Analysts), அரசியல் ஆய்வாளர்கள் (Political Scientists), தொகுப்பாளர்கள் (Editors), பொது உறவுகள் நிபுணர்கள் (PR Professionals), தரவியல் விஞ்ஞானிகள் (Data Scientists), கல்வி, தகவல் தொடர்பு மற்றும் ஊடகம், மருத்துவமனை ஆகிய தொழில்களும் பாதிக்கப்படக் கூடும் அபாயம் உள்ளது.
இந்த வேலைகள் முழுமையாக அழிக்கப்படும் என எங்கும் உறுதியாக கூறவில்லை. அதற்கு மாறாக, ஏஐ துறையின் வளர்ச்சி வேகம் அதிகமாக இருந்தாலும், அதன் விளைவுகள் தொழில்நிலையங்களை எப்படி மாற்றி அமைக்கிறோம் என்பதில்தான் நிர்ணயிக்க முடியும் எனக் கூறுகிறது. மேலும், மொழிபெயர்ப்பாளர் போன்று அதிக அபாயம் உள்ள தொழில்களிலும், பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஏஐ கருவிகளுடன் வேலை செய்வது எப்படி? ஏஐயை ஒரு உதவியாளராக எப்படி பார்க்கலாம்? அவை செய்யும் வேலையை புரிந்து, மேலதிக மதிப்பு சேர்க்கக்கூடியது என்ன? என சிந்தித்து தங்களின் நிலையை மறுசீரமைக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.


Click it and Unblock the Notifications