மும்பை: இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சுங்க சாவடிகள் மூலம் 580 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் அதிகம் என தெரியவந்துள்ளது.
உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலைகள் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்த நெடுஞ்சாலைகளை கட்டமைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் சுங்கச்சாவடி அமைத்து வாகன ஓட்டிகளிடம் அதற்கான சுங்க கட்டணத்தை வசூல் செய்கின்றன. அந்த வகையில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் வருமானம் ஈட்டும் சுங்கச்சாவடி எது என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ஐஆர்பி இன்பிரா டெவலப்பர்ஸ் நிறுவனம் இந்தியாவில் சுங்கச்சாவடிகளின் வருவாய் விகிதம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி 2024 டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் இருக்கும் மொத்த அனைத்து சுங்கச்சாவடிகளில் இருந்து மொத்தமாக 580 கோடி ரூபாய் வருமானம் பெறப்பட்டுள்ளது. இது கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 488 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது கடந்த ஓராண்டு காலத்தில் இது 19% உயர்ந்துள்ளது.
இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவிலேயே அதிகபட்சமாக மும்பை புனே இடையிலான எக்ஸ்பிரஸ் வேயில் டிசம்பர் மாதம் 163 கோடி ரூபாய் சுங்க கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 158 கோடி ரூபாயாக இருந்தது.
மும்பை புனே எக்ஸ்பிரஸ்வே மொத்தம் 94.5 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. 100 கிலோ மீட்டருக்குள் இருக்கக்கூடிய இந்த நெடுஞ்சாலை தான் இந்தியாவிலேயே அதிக சுங்க கட்டணத்தை வசூல் செய்த சாலையாக இருக்கிறது.
அடுத்ததாக இந்த பட்டியலில் அகமதாபாத் மற்றும் வதோதரா இடையிலான நெடுஞ்சாலை 70.7 கோடி ரூபாய் சுங்க கட்டணமாக வசூல் செய்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 66 கோடி ரூபாயாக இருந்தது. சிட்டோர்கார்க் மற்றும் குலப்புரா இடையிலான சுங்கச்சாவடி 33.3 கோடி ரூபாய் வருமானமாக ஈட்டி உள்ளது. இது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31.5 கோடி ஆக இருந்தது.
அதேபோல உதய்பூர் மற்றும் ஷாமலாஜி இடையிலான நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்கச்சாவடி 27 கோடி ரூபாயை வருமானமாக பெற்றுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு 26 கோடி ரூபாயாக இருந்தது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஹைதராபாத் அவுட்டர் ரிங் சாலையில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடியில் சுங்க கட்டண வசூல் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு டிசம்பரில் இங்கே 62.7 கோடி ரூபாயாக இருந்த சுங்க கட்டணம் வசூல் 2024 டிசம்பரில் 71.3 கோடி என உயர்ந்திருக்கிறது. பெரும்பாலும் இந்த பட்டியலில் வட இந்தியாவில் இருக்கும் சுங்கச்சாவடிகளே இடம் பெற்றுள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications