இந்தியாவின் முக்கிய 7 நகரங்களில் வீட்டு விற்பனை 2024 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் சுமார் 20% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,20,335 வீடுகள் விற்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அதே காலத்தில் 96,285 வீடுகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. டெல்லி-NCR, மும்பை மாநகரம், பெங்களூரு, ஹைதராபாத், புனே, கொல்கத்தாவில் வீடு விற்பனைகள் குறைந்த நிலையில், சென்னையில் மட்டும் விற்பனை அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் ஏன் அதிகம்..?: சென்னையில் அதிகளவில் "Global Capability Centres" (GCCs) நிறுவப்படுவதாகக் கூறப்படுகிறது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையை ஒரு சேவை மற்றும் தொழில் மையமாக மாற்றி வருகின்றன. இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரித்து, வேலைக்காக வரும் மக்கள் சென்னையில் குடியிருப்பதற்காக வீடுகள் வாங்கத் தொடங்கியுள்ளனர். சென்னையில் வீட்டு விற்பனை முந்தைய ஆண்டுடன் (2024 Q2) ஒப்பிடுகையில் 11% அதிகரித்துள்ளது. (2024இல் விற்கப்பட்ட வீடுகள் 5,100 யூனிட்கள், 2025இல் விற்கப்பட்ட வீடுகள் 5,660 யூனிட்கள் ஆகும்).

அதே நேரத்தில், முந்தைய காலாண்டுடன் (2025 Q1) ஒப்பிட்டால், சென்னையில் வீட்டு விற்பனை 40% உயர்வடைந்துள்ளது. இது மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. மற்ற நகரங்களில் வீட்டு விற்பனை சரிவில் இருக்கும் போது, சென்னை மட்டும் வளர்ச்சியைக் காண்பது, நகரத்தின் பொருளாதாரத்தையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் காட்டுகிறது. சென்னையில் புதிய வீட்டு திட்டங்கள் 65% உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 79% அதிகரித்துள்ளது. இந்த புதிய திட்டங்கள் வீடு தேடும் மக்களுக்கு அதிகமான தேர்வுகளை வழங்க, விற்பனை அதிகரிக்க காரணமாக உள்ளன. இதில் 79% வீடுகள் நடுத்தர மற்றும் உயர்தர வர்க்கத்திற்கே உட்பட்டவை ஆகும்.
விற்பனை குறைவதற்கான முக்கிய காரணங்கள் : வீட்டு விலை மிகவும் உயர்ந்திருப்பது, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை குறைதல், இனி வீடு வாங்கலாமா வேண்டாமா என்ற தயக்கம் ஆகியவையால் மக்கள் வீடு வாங்கும் எண்ணத்தை தள்ளிப் போட்டுள்ளன. ஆனால், இது எதிர்கால வீட்டு சந்தை நிலவரத்தையும் பாதிக்கக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
வீட்டு விலை அதிகரிப்பு : 2025 ஏப்ரல்-ஜூன் காலத்தில், இந்தியாவின் முன்னணி 7 நகரங்களில் வீட்டு விலை சராசரியாக வருடத்திற்கு 11% உயர்ந்தது. ஆனால், கடந்த 3 மாதங்களில் (காலாண்டு அடிப்படையில்) விலை உயர்வு சுமார் 1% மட்டுமே உள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வீட்டு விலை 27% உயர்ந்துள்ளது. பெங்களூருவில் 12%, ஹைதராபாத்தில் 11% உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் வீடு வாங்க நினைப்போரின் மனநிலை பாதிக்கப்பட்டு, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்கும் முடிவை தள்ளிப்போடுகின்றனர்.
சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் Global Capability Centres (GCC) கம்பெனிகள் மொத்தம் 5.29 மில்லியன் சதுரஅடிகள் வாடகைக்கு எடுத்துள்ளன. 2023இல் 2 மில்லியன் சதுரஅடிகளாக இருந்த நிலையில், 2024இல் 3.29 மில்லியன் சதுரஅடிகளாக அதிகரித்துள்ளது. (இதன் மூலம் 2023-வுடன் ஒப்பிடுகையில் 64% அதிகரிப்பு) 2025ஆம் ஆண்டிலும் இதே நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் சென்னை நகரில் வேலை வாய்ப்பும், வீடு வாங்கும் தேவையும் அதிகரித்து வருகின்றன.
சென்னையில் வீடு வாங்கும் தேவையும் (demand), புதிய வீடுகளின் அளவையும் (supply) சரியாக சமநிலைப்படுத்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கவனமாக முயற்சி செய்து வருகின்றன. இதனால், தேவைக்கு ஏற்ப புதிய வீடுகள் உருவாகி, சென்னை நகரில் வீட்டு விற்பனை அதிகரித்து வருகிறது என்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 2025ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு இந்தியாவில் வீடு விற்பனை சந்தைக்கு சிக்கலான காலமாக இருந்தது.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நடந்த போர் நடவடிக்கைகளால் வீடு வாங்கும் எண்ணத்தை மக்கள் தள்ளிப் போட்டுள்ளனர். இதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் வீட்டு விலைகள் மேலும் வீடு வாங்கும் ஆர்வத்தை குறைத்துள்ளன. ஆனால் தற்போது, போர் நடவடிக்கைகள் குறைந்து ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைத்ததால், வீடு வாங்குபவர்களின் நம்பிக்கை மீண்டும் உயரும் நிலையில் உள்ளதாக ANAROCK குழுமத்தின் தலைவர் அனுஜ் புரி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications