இந்திய தொழில்நுட்பத் துறையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் (Infosys) இந்த நிதியாண்டில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் உறுதியுடன் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 12,000 புதிய பட்டதாரிகளை இன்ஃபோசிஸ் பணியமர்த்தியுள்ளது. மேலும், ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 20,000 புதிய பணியாளர்களை சேர்க்கும் இலக்கை எட்ட நிறுவனம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
அக்டோபர் 16ஆம் தேதியன்று நடைபெற்ற இரண்டாவது காலாண்டு வருவாய் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) ஜெயேஷ் சங்ராஜ்கா, "இந்த நிதியாண்டின் தொடக்கத்தில், எங்கள் இலக்கு 15,000 முதல் 20,000 புதிய பட்டதாரிகளை பணியமர்த்துவதாக இருந்தது. இதுவரை 12,000 பேரை பணியில் சேர்த்துள்ளோம். எனவே 20,000 என்ற இலக்கை அடைவதற்கான பாதையில் நாங்கள் பணித்துக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

ஊழியர் எண்ணிக்கை உயர்வு மற்றும் லாபம் : செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 13.2 சதவிகித உயர்வை அடைந்து ரூ.7,364 கோடியை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஈட்டிய ரூ.6,506 கோடியை விட அதிகமாகும். அதேசமயம், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாயும் 8.6 சதவிகிதம் அதிகரித்து ரூ.44,490 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தக் காலாண்டில் பெரிய அளவிலான ஒப்பந்தங்களைப் பெற்றதே இந்த லாப உயர்வுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதே காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனம் 8,203 புதிய ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை ஜூன் 2025 காலாண்டில் இருந்த 3,23,788-இல் இருந்து 3,31,991-ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த காலாண்டில் பணியாளர்களின் விலகல் விகிதம் 14.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அதே சமயம், போட்டி நிறுவனமான டிசிஎஸ் (TCS), தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் திறன் இடைவெளிகளை காரணம் காட்டி சமீபத்தில் தனது ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 2% குறைத்தது. மறுபுறம், HCL Tech நிறுவனம் முதல் பாதியில் 7,180 புதிய பட்டதாரிகளை மட்டுமே பணியமர்த்தியது.
இச்சூழலில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலில் பாரேக், "இரண்டாவது காலாண்டில் எங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. எங்களின் லாப வரம்பு 21 சதவிகிதமாக உள்ளது. நாங்கள் பெற்ற புதிய ஒப்பந்தங்களின் மதிப்பு 3.1 பில்லியன் டாலர் ஆகும். இதில் 67% முற்றிலும் புதிய பணிகள் தான்.
மேலும், காலாண்டின் முடிவுக்குப் பிறகு 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு மெகா ஒப்பந்தத்தையும் நாங்கள் அறிவித்தோம்" என்று தெரிவித்துள்ளார். சவால்கள் நிறைந்திருக்கும் நிலையிலும், புதிய திறமையாளர்களை சேர்ப்பதில் இன்ஃபோசிஸ் காட்டும் ஆர்வம், அதன் எதிர்கால வளர்ச்சி மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது.


Click it and Unblock the Notifications