ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனத்தின் மனிதவள இயக்குனராக இருந்த அல்கா மிட்டல், தற்போது அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகமான ஓஎன்ஜிசி, அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அல்கா மிட்டலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்தோடு ஓஎன்ஜிசி-க்கு தலைமை பொறுப்பேற்கும் முதல் பெண் தலைவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளது.
யார் இந்த அல்கா மிட்டல்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருந்து வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தற்காலிக தலைவராக இருந்து வந்த சுபாஷ் குமார், இந்த வருடத் தொடக்கத்தில் ஓய்வுபெற்றத்தையடுத்து, ஓஎன்ஜிசி-யின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஏற்கனவே ஓஎன்ஜிசி-யின் நிர்வாக குழுவின் மூத்த இயக்குனராக இருந்து வரும் அல்கா மிட்டல், இனி கூடுதலாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பினையும் வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் பதவியில் முதல் பெண்
அல்கா மிட்டல் ஓஎன்ஜிசி-யின் முதல் உயர் பதவியில் அமரும் முதல் பெண் ஆவார். பொருளாதார பிரிவில் முதுகலை பட்டதாரியான இவர், MBA (HRM) பிரிவிலும் முனைவர் பட்டம் பெற்றவர். 1985ல் ஓஎன்ஜிசி பட்டதாரி பயிற்சியாளராகவும் இணைந்துள்ளார். தற்போது வரையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது அனுபவத்தினை பகிர்ந்து வந்த அல்கா, தற்போது உயர் பதவியினை எட்டியுள்ளார்.
இயக்குனர் குழு உறுப்பினர்
கடந்த ஆகஸ்ட் 2015 முதல் ஓஎன்ஜிசி-யின் மங்களூரு பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் குழுமத்தின் இயக்குனர் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். இப்பதவி உயர்வுக்கு முன்னதாக தலைமை திறன் மேம்பாட்டு (CSD) துறையின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் இந்த பதவியினை வகித்த காலக்கட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட பயிறசியாளர்களை பயன்படுத்தி, தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தினையும் சிறப்பாக செயல்படுத்தியுள்ளார்.
பல்வேறு பதவிகள்
இதே தலைமை CSR ஆக பணிபுரிந்த காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.
அது மட்டும் அல்ல, வதோதரா, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் ஓஎன்ஜிசி-யின் ஹெச் ஆர் - இ ஆர் செயல்பாடுகளுக்கும் தலைமை தாங்கியுள்ளார். இது தவிர 2009ம் ஆண்டில் டெல்லி மற்றும் ஜோர்ஹார்டில், ஓஎன்ஜிசி-யின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் தலைவராகவும் இருந்துள்ளார். இப்படி பல்வேறு பணிகளை செய்த அல்கா, தற்போது தலைமை பொறுப்பினை எட்டியுள்ளார்.
சிங்கப்பெண்ணுக்கு வாழ்த்துகள்
இப்படி பல்வேறு பதவிகளை வகித்த அல்காவுக்கு, இதுவும் ஒரு சரியான பதவியாகவே இருக்கும். நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக இருந்து வரும் ஓ என் ஜி சியில் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள சவால்களையும், பிரச்சனைகளையும் எப்படி வழி நடத்தி செல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே. எப்படியிருப்பினும் இந்த சிங்கப்பெண்ணுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லி வாழ்த்துவோமே.


Click it and Unblock the Notifications