சீனாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரக்கூடிய ஒரு நபராக இருக்கிறார் காலின் ஹுவாங் (Colin Huang). மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்யக்கூடிய ஈ காமர்ஸ் தளத்தை நிறுவிய இவர் சீனாவின் நம்பர் ஒன் பணக்காரராக உயர்ந்திருக்கிறார். இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் சீனாவில் சொந்தமாக Temu என்ற ஈ காமர்ஸ் தளத்தை உருவாக்கி, தற்போது நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். காலின் ஹுவாங்கின் சொத்து மதிப்பு 48.6 பில்லியன் டாலர்கள் என்கிறது ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தி. இதற்கு முன்பு சீன பணக்காரராக இருந்த ஸோங் சான்ஷானை பின்னுக்கு தள்ளி காலின் ஹுவாங் இந்த இடத்தை பிடித்துள்ளார்.
காலின் ஹுவாங் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்: உலக பணக்காரர்கள் பட்டியலில் 25ஆவது இடத்தில் இருக்கிறார் காலின் ஹுவாங். சீனாவில் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கிறார்.

காலின் ஹுவாங்க்கு அடுத்த படியாக பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர், வீ சாட் நிறுவனத்தின் தலைவர் மா ஹுவாதெங் ஆவார். டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஸாங் யிமிங் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
காலின் ஹுவாங் கிழக்கு சீனாவில் உள்ள ஹாங்சௌ நகரில் 1980-ஆம் ஆண்டு பிறந்தார். கூகுள் நிறுவன முன்னாள் ஊழியரான இவர் 2015ஆம் ஆண்டில் Pinduoduo என்ற ஆன்லைன் ஷாப்பிங் தளத்தை நிறுவினார். இது சீனாவின் முக்கியமான ஈ காமர்ஸ் தளமாக உருவெடுத்துள்ளது.
அதிக தள்ளுபடி மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்தது இவரது நிறுவனம். இதன் வெளிநாட்டு ஈகாமர்ஸ் தளமாக Temu என்ற தளம் 2022-இல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.
பின்னர் ஐரோப்பாவுக்கும் இது விரிவாக்கப்பட்டது. இந்த செயலியில் 75 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. Temu செயலி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பிரபலமாகி வரும் நிலையில் உள்ளூர் நிறுவனங்கள் இதன் மீது பல புகார்களை முன் வைக்கின்றன. பயனாளர்கள் சுதந்திரமான முடிவெடுக்காத வகையில் இந்த செயலி தவறாக வழிநடத்துவதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக தென் கொரியா அரசு, போலி விளம்பரம் செய்தது மற்றும் முறையற்ற விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகிய குற்றச்சாட்டை முன் வைத்து Temu செயலி மீது விசாரணையை தொடங்கியுள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications