டெக்சாஸ், அமெரிக்கா: அமெரிக்காவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் பதவியிலும் அரசியலிலும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் பிறந்த 35 வயதான ஒரு இளைஞர் டெக்ஸாஸில் மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார்.டெக்சாஸின் டிராவிஸ் மாவட்டத்தில் உள்ள தி ஹில்ஸ் பகுதியில் மேயர் தேர்தலில் இவர் களம்காண்கிறார். தேர்தலில் வெற்றி பெற்றால் டெக்ஸாசின் இளம் வயது மேயர் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட முதல் மேயர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும்.
கார்த்திக் நரலசெட்டி 35 வயதான இவர் இந்திய அமெரிக்க தொழில் அதிபர் ஆவார். வரும் ஐந்தாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது , அத்துடன் தி ஹில்ஸ் பகுதிக்கான மேயர் தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தான் வெற்றி பெறுவேன் என கார்த்திக் மிக உறுதியுடன் இருக்கிறார்.

மொத்தம் 2000 பேர் மக்கள்தொகை கொண்ட தி ஹில்ஸ் பகுதியில் 5 இந்திய குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இங்கே அனைத்து மக்களுக்கான அரசை அமைப்பதை தனது நோக்கம் என கார்த்திக் தெரிவிக்கிறார். ஆந்திர மாநிலம் குண்டூரை பூர்வீகமாகக் கொண்ட கார்த்திக் டெல்லியில் தன்னுடைய இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்கா சென்று ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்தார். கணினி அறிவியல் பிரிவில் பட்டப் படிப்பை முடித்த இவர் பின்னர் இந்தியா திரும்பி சோசியல் பிளட் (Socialblood) என்ற தன்னுடைய முதல் நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனம் ரத்த தானத்தை அடிப்படையாகக் கொண்டது . சர்வதேச அளவில் ரத்த தானம் செய்பவர்களையும் ரத்தம் வேண்டி இருப்பவர்களையும் ஒரு தளம் இதுவாகும். சுமார் 12 கோடி மக்கள் இந்த சோசியல் பிளட் தளத்தை பயன்படுத்துகின்றனர். நாய் உள்ளிட்ட செல்ல பிராணிகளை வளர்க்கக்கூடிய நபர்களுக்கு அவற்றை அழகு படுத்துவதற்கான நபர்களோடு இணைக்கும் ஒரு நிறுவனமான PAWSH நிறுவனத்தையும் இவர் உருவாக்கினார்.
பின்னர் இவர் ஆப்பிள், வால்மார்ட் ஆகிய உலகின் முன்னணி நிறுவனங்களில் எல்லாம் ப்ராடக்ட் டிசைனராக பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். தன்னுடைய தொழில் முனைவோர் பயணம் மூலம் தனக்கு கிடைத்த பாடங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பகுதியை மேம்படுத்த தான் பாடுபடுவேன் என அவர் பரப்புரைகளில் தெரிவித்து வருகிறார்.
4 வயது சிறுமிக்கு தலசீமியா பாதிப்பு இருந்தது என்ற தான் படித்த ஒரு கட்டுரை தான் சோசியல் பிளட் தளத்தை உருவாக்க காரணமாக இருந்தது என அவர் கூறியுள்ளார். அந்த சிறுமியின் சிகிச்சைக்கு ரத்தம் தேடி குடும்பத்தினர் அலைவதாக கட்டுரையில் படித்த பிறகு தான் இதுபோல ரத்தம் தேவைப்படுபவர்களுக்கும் ரத்த தானம் செய்ய முன்வரும் நபர்களையும் இணைக்கும் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்ற யோசனை பிறந்து தன்னுடைய சோசியல் பிளட் என்ற நிறுவனத்தை உருவாக்கியதாக கூறுகின்றார். மேலும் 30 வயது உட்பட்ட 30 சாதனையாளர்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலிலும் இவர் இடம் பிடித்துள்ளார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications