சென்னை: அமெரிக்காவில் நிர்வாக அலுவலகம், சீனாவில் உற்பத்தி தளம், தைவான் கூட்டாளிகளைக் கொண்டு ஸ்மார்ட்போன் விற்பனையில் மன்னனாக இருக்கும் ஆப்பிள், தனது புதிய தலைமை நிதி அதிகாரியாக (CFO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவின் பாரிக்கை நியமித்துள்ளது. யார் இந்த கெவின் பாரிக்..? ஆப்பிளின் CFO ஆகும் அளவுக்கு இவர் உயர என்ன காரணம்..?
தற்போது ஆப்பிளின் நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் துணைத் தலைவராக உள்ள கெவின் பாரிக், 2025 ஜனவரி 1 முதல் தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்று ஆப்பிள் நிர்வாகக் குழுவில் சேர உள்ளார். கெவின் பாரிக் மற்றும் ஆப்பிளுக்கு சுமார் 11 வருட பந்தம் உள்ளது. ஆனா இதற்கு முன்பு என்ன செய்தார்..?

கெவின் பாரிக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருக்கும் வேளையில், இவருடைய பர்சனல் தகவல்கள் தெரியவில்லை என்றாலும், அவருடைய கல்வி, வேலைவாய்ப்பு, பிற முக்கிய சாதனைகள் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளது.
ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனத்தில் CFO பதவிக்கு வர வேண்டும் என்றால் கல்வி தகுதி மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் கெவின் பாரிக் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து உலகின் புகழ்பெற்ற பிஸ்னஸ் ஸ்கூல்களில் ஒன்றான சிகாகோ பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றுள்ளார் கெவின்.
52 வயதான கெவின் பாரிக் 11 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிளில் சேர்ந்தார். நிறுவனத்தின் நிதியியல் குழுவின் தன்னை விரைவாக முக்கிய பகுதியாக நிலைநிறுத்திக் கொண்டது மூலம் இவருடைய அதிரடி செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடிகிறது. டிம் குக் இவரைப் பல முறை பாராட்டியும் உள்ளார். தற்போது ஆப்பிளின் நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் துணைத் தலைவராக பணியாற்றி வருகின்றார் கெவின்.
இந்த பதவிக்கு முன்பு கெவின் பாரிக ஆப்பிளில் உலகளாவிய விற்பனை, ரீடைல் மற்றும் மார்கெட்டிங் பிரிவுக்கு தலைமை தாங்கினார். Bloomberg அறிக்கையின்படி, கெவின் பாரிக் கடந்த சில மாதங்களில் CFO லூகா மேஸ்ட்ரி மூலம் தலைமை நிதி அதிகாரி பதவிக்கு தயார்ப்படுத்தப்பட்டு வந்துள்ளது தெரிய வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தில் சேருவதற்கு முன், கெவின் பரேக் தாம்சன் ராய்ட்டர்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களில் பல்வேறு உயர் மட்ட தலைமைப் பதவிகளை வகித்தார். இந்திய வம்சாவளி நிர்வாகி நான்கு ஆண்டுகள் ராய்ட்டர்ஸுடன் பணியாற்றியுள்ளார். நிதித்துறை துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார். பின்னர் நிறுவனத்தின் பொருளாளராக பணியிலிருந்து விலகினார்.
இதை தொடர்ந்து ஜெனரல் மோட்டார்ஸில், பாரிக் நியூயார்க் அலுவலகத்தில் வணிக மேம்பாட்டு இயக்குநராக இருந்தார். மேலும் ஐரோப்பாவில் சூரிச்சில் பிராந்திய பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார் கெவின். ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்து வெறும் 11 ஆண்டுகளில் CFO பதவிக்கு வந்தது மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications