மும்பை: டாடா நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் அடையாளமாகவும் இருந்தவர் தான் ரத்தன் டாடா. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் தலைவராக பதவி வகித்து வந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி இவர் மும்பையில் காலமானார்.
ரத்தன் டாடாவின் மறைவு நாட்டையே அதிர செய்தது. ரத்தன் டாடா தான் இறப்பதற்கு முன்பாகவே தன்னுடைய சொத்துகள் எப்படி பகிரப்பட வேண்டும், அவை யாருக்கெல்லாம் செல்ல வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்திருந்தார்.

அறக்கட்டளை, சகோதரிகள், வீட்டு பணியாளர்கள் , உதவியாளர் சாந்தனு நாயுடு என பலரையும் அவர் குறிப்பிட்டு யார் யாருக்கு என்னென்ன வழங்கப்பட வேண்டும் என்பதை உயிலில் குறிப்பிட்டிருந்தார். அதிலும் தன்னுடைய வளர்ப்பு நாய்களை கவனித்து கொள்ளவும் தனிப்பட்ட முறையில் சொத்தினை ஒதுக்கி இருந்தார்.
இதன் படி மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, தன்னுடைய சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கை மோகினி மோகன் தத்தா என்பவருக்கு எழுதி கொடுத்துள்ளார். அது தான் தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசபட்டு வருகிறது. டாடா குடும்ப உறுப்பினரும் கிடையாது, டாடாவின் இறுதி காலத்திலும் இவர் பெரிய அளவில் தென்படவில்லை, ஆனால் டாடா ஏன் இவருக்கு இவ்வளவு தொகையை வழங்க முன் வந்தார் என பலரும் விவாதிக்கின்றனர்.
ஜாம்ஷெத்பூரைச் சேர்ந்த தொழிலதிபரான மோகினிமோகன் தத்தா 74 வயதானவர். இவர் ஸ்டாலியன் எனும் பயண முகமையின் உரிமையாளர். கடந்த 2013ஆம் ஆண்டு இவர், தனது நிறுவனத்தை டாடா குழுமத்துடன் இணைத்துக் கொண்டார். டாடா குழும நிறுவனங்களில் எல்லாம் இவருக்கு பங்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ரத்தன் டாடாவுக்கு 24 வயதாகும் போது தான் முதன்முதலில் தத்தாவை சந்தித்தாராம். 1960களில் இந்த சந்திப்பு நிகழ்ந்து இருவரும் நண்பர்களானார்கள். டீலர்களுக்கான ஹாஸ்டலில் ரத்தன் டாடாவை சந்தித்து நட்பு ஏற்பட்டு நான் என் தொழிலில் முன்னேற அவர் உறுதுணையாக இருந்தார் என தத்தா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பின்னர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பரானார்.
ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரிய நபராக திகழ்ந்து வந்துள்ளார். இருவரும் 60 ஆண்டு கால நண்பர்கள். தத்தாவை சிலர் ரத்தன் டாடாவின் தத்துப்பிள்ளை என கூறுவார்கள். அந்த அளவுக்கு இருவரும் பரஸ்பரம் நட்பு பாராட்டியும் ஒருவருக்கு ஒருவர் துணையாகவும் இருந்துள்ளனர். இவரது மகள் டாடா அறக்கட்டளை மூலம் 10 ஆண்டுகளாக கல்வி பயின்றுள்ளார், மேலும் தாஜ் ஹோட்டல்ஸில் பணிபுரிந்துள்ளார்.
ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதம் மும்பையில் அவரது பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நெருங்கிய உறவினர்களும், முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மோகினிமோகன் தத்தாவும் பங்கேற்றார்.
ரத்தன் டாடாவின் உயில் படி இவர் 659 கோடி ரூபாய் செட்டில்மெண்ட் கேட்கிறாராம், ஆனால் ரத்தன் டாடாவின் உயில் மும்பை உயர்நீதிமன்ற ஆய்வுக்கு செல்கிறது, அதன் பின்னரே இவருக்கான தொகை உறுதியாகும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications