டெலிகிராம் அப்ளிகேஷனை தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் டெலிகிராம் அப்ளிகேஷனுக்கு எக்கச்சக்க ஃபேன் பேஸ் இருக்கிறது. சுமார் 900 மில்லியன் பயனர்கள் இப்போது வரை இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்திற்கு வெளியே உள்ள போர்ஜெட் விமான நிலையத்தில் டெலிகிராம் அப்ளிகேஷன் நிறுவனர் மற்றும் தலமைச் செயல் அதிகாரியான பாவெல் துரோவ் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஆன்லைன் குற்றங்களுக்கு டெலிகிராம் அப்ளிகேஷன் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இந்த அப்ளிகேஷனின் சிஇஓ பாவெல் துரோவ் இது போன்ற சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். தற்போது அர்ரெஸ்ட் வாரன்ட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பாவெல் துரோவ்-இன் கைது நடவடிக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சகம், இந்த சூழ்நிலையை தடுத்து சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், மேற்கத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGOs) அவரது விடுதலையை கோருமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
யார் இந்த பாவெல் துரோவ்?: ரஷ்யாவில் பிறந்த 39 வயதான பாவெல் துரோவ், இலவசமாக பயன்படுத்தக்கூடிய டெலிகிராம் செயலியின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். இந்த மெசேஜிங் தளம் பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் வீ-சாட் போன்ற பிற சமூக ஊடக தளங்களுடன் போட்டியிடும் ஒரு அப்ளிகேஷன்.

ரஷ்யா, உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகளில் டெலிகிராம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இது உக்ரைனில் ரஷ்யாவின் போர் குறித்த தகவல்களுக்கான முக்கிய ஆதாரமாகவும் மாறியுள்ளது. சிலர் இந்த டெலிகிராம் அப்ளிகேஷனை "போருக்கான ஒரு விர்ச்சுவல் போர்க்களம்" என்று அழைக்கின்றனர்.
ஃபோர்ப்ஸ் நிறுவன அறிக்கையின்படி துரோவின் சொத்து மதிப்பு 15.5 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய மற்றும் பிரான்ஸ்-இல் உள்ள செய்தி நிறுவனங்கள் துரோவ் 2021-ஆம் ஆண்டில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றதாகக் கூறுகின்றன.
பல மோசடி சம்பவங்களும் குற்ற செயல்களும் டெலிகிராம் செயலியின் மூலம் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட டெலிகிராம் நிறுவனர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications