டெல்லி: தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள ஏசி(AC) பயன்பாடு அவசியமாகியுள்ளது. வீடுகள், அலுவலகங்கள், பேருந்துகள் என எங்கு சென்றாலும் வெயிலை சமாளிக்க ஏசி பயன்படுத்தப்படுகிறது. அப்படி தான் பல்வேறு பள்ளிகளிலும் குறிப்பாக தனியார் பள்ளிகளில் ஏசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஏசி பயன்பாடு மற்றும் அதற்கான கட்டணத்தை பெற்றோர் ஏற்க வேண்டுமா அல்லது பள்ளி நிர்வாகம் ஏற்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பள்ளிகளில் குழந்தைகளுக்காக ஏசி பயன்படுத்தப்பட்டால் அதற்கான தொகையை பெற்றோர்களை ஏற்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் ப்ரீத்தம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லியை சேர்ந்த மணீஷ் கோயல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தன்னுடைய குழந்தை படிக்கும் பள்ளியில் வகுப்பறைகளில் ஏசி பயன்படுத்துவதற்காக மாதம் ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் இது விதிகளுக்கு புறம்பானது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தனியார் பள்ளிகள் வகுப்பறைகளில் ஏசி பயன்படுத்துவதற்காக பெற்றோரிடமிருந்து கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க டெல்லி பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அந்த பொதுநல மனுவில் கோரப்பட்டு இருந்தது.
வகுப்பறைகளில் மாணவர்களுக்கு ஏசி பொருத்தப்படுவது என்பது ஒரு பள்ளியின் கடமை இந்த செலவினை பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர பெற்றோர் மீது போடக்கூடாது என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மாணவர்களுக்கு எப்படி ஸ்மார்ட் கிளாஸ் ரூம் மற்றும் லேப் வசதி உள்ளதோ அதே போன்ற வசதி தான் வகுப்பறைகளில் ஏசி பொருத்துவது, லேப் கட்டணம், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் கட்டணம் போல ஏசி பயன்பாட்டுக்காகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை பெற்றோர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறிவிட்டது.
பெற்றோர் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது அந்த பள்ளியில் உள்ள வசதிகள் அந்த வசதிக்காக நாம் செலுத்த வேண்டிய கட்டணங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் பள்ளியை தேர்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் அப்போது கருத்து தெரிவித்தனர்.
மேலும் இது போன்ற நிதிச் சுமைகளை பள்ளி நிர்வாகத்தின் மீது போடுவது சரியாகாது எனவே வகுப்பறைகளில் பயன்படுத்தப்படும் ஏசி மற்றும் அதற்கான மின் கட்டணத்திற்காக பள்ளி விதிக்கும் தொகையை பெற்றோரே ஏற்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications