இந்தியாவில் தற்போது சாமானிய மக்களுக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும், அனைத்து தரப்பினரையும், பெரும் பகுதி மக்களையும் பாதிப்பது விலைவாசி உயர்வு தான். சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு அறிவித்த கலால் வரி உயர்வு ரீடைல் விற்பனை விலையில் எதிரொலிக்காதது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சிலிண்டர் விலை உயர்வு மக்களை பாதித்தது. இந்த நிலையில் மத்திய அரசு கடந்த மாதத்திற்கான பணவீக்க தரவுகளை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மார்ச் மாதத்தில் வருடாந்திர அடிப்படையில் 2.05 சதவீதமாக குறைந்துள்ளது.

இது கடந்த ஜனவரி மாதத்தில் பதிவான 2.38 சதவீதத்திலிருந்து பெரிய அளவில் குறைந்துள்ள மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவை மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது.
மார்ச் மாதத்தில் நாட்டின் உணவு விலை பணவீக்கம் 5.94 சதவீதத்தில் இருந்து 4.66 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல் அடிப்படை பொருட்களின் பணவீக்கம் 2.81 சதவீதத்தில் இருந்து 0.76 சதவீதமாக குறைந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான பணவீக்கம் 0.71 சதவீதத்தில் இருந்து 0.20 சதவீதமாக குறைந்துள்ளது.
மொத்த விலை பணவீக்க கணக்கீட்டில் சுமார் 64 சதவீத பங்கீட்டை வகிக்கும் உற்பத்தி துறை பொருட்கள் மீதான பணவீக்கம் 2.86 சதவீதத்தில் இருந்து 3.07 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் நாட்டின் ரீடைல் பணவீக்கம் தரவுகளை இன்று மாலை மத்திய அரசு வெளியிடும், ஜனவரி மாதம் 4.31 சதவீதமாக பதிவான ரீடைல் பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் 3.61 சதவீதமாக குறைந்து 7 மாத சரிவை எட்டியது.
சமீபத்திய மாதங்களில் காய்கறி உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக, மொத்த விலை பணவீக்கத்தில் உணவுப் பொருட்களின் தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக, காய்கறிகளின் விலை மீதான பணவீக்கும் 15.88% குறைந்துள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 5.80% குறைந்தது குறிப்பிடத்தக்கது.
வெங்காயத்தின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 26.65% ஆக குறைந்துள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 48.05% ஆக இருந்தது. அதே சமயம், உருளைக்கிழங்கின் பணவீக்கம் -6.77% ஆக உள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 27.54% ஆக இருந்தது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் கடந்த மாதம் -2.98% ஆக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் -1.04% ஆக இருந்தது. தானியங்களின் விலையைப் பொறுத்தவரை, மொத்த விற்பனை சந்தைகளில் மார்ச் மாதத்தில் 5.49% உயர்வு ஏற்பட்டுள்ளது. இது முந்தைய மாதத்தில் 6.77% ஆக இருந்தது.
காய்கறிகள் மற்றும் சில மளிகைப் பொருட்களின் விலை குறைந்துள்ள அதே வேளையில், தானியங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பிப்ரவரி மாத கள நிலவரம். மார்ச் மாத நிலவரம் இன்று மாலை வெளியாகும்.


Click it and Unblock the Notifications