சுவிட்சர்லாந்தில் 7 பேரில் ஒருவர் கோடீஸ்வரராக உள்ளார். இது அமெரிக்காவை விட 5 மடங்கு அதிகம். அவர்களின் செல்வத்தை உருவாக்கும் ரகசியம் என்ன? ஒரு எட்-டெக் தொழில்முனைவர், சுவிஸ் கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வத்தை எப்படி உருவாக்குகின்றனர், அதைப் பாதுகாக்க அவர்கள் பயன்படுத்தும் உத்திகள் என்ன என்பதைப் பகிர்ந்துள்ளார். அதன் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பாப்போம்.
அபாயங்களைக் குறைத்து, வாய்ப்புகளை அதிகரித்தல்: சுவிஸ் கோடீஸ்வரர்கள் வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வெவ்வேறு சலுகைகளைப் புரிந்துகொள்கின்றனர். உதாரணமாக, ஒரு வங்கி ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கலாம். மற்றொரு வங்கி சர்வதேச வர்த்தகத்தில் சிறந்து விளங்கலாம். சுவிஸ் கோடீஸ்வரர்கள் வாய்ப்புகளை அதிகரிக்கவும், அபாயங்களைக் குறைக்கவும் ஒவ்வொரு வங்கியின் தனித்துவமான நன்மைகளையும் பயன்படுத்துகின்றனர்.

டிசைனர் லோகோக்கள் மற்றும் ஆடம்பர கார்கள் இல்லை: சுவிஸ் கோடீஸ்வரர்களை டிசைனர் லோகோக்கள் அல்லது ஆடம்பர கார்கள் பயன்படுத்துவதை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. அவர்கள் தங்கள் வசதிக்குக் கீழே வாழ்கின்றனர். அதிலிருந்து சேமிக்கப்படும் தொகையை மீண்டும் முதலீடு செய்கின்றனர்.
இவர்களிடம் அனைத்து செல்வங்களும் இருந்தும் அவற்றை மீண்டும் முதலீடு செய்து தாமதமாக செல்வம் கிடைத்தாலும் அதில் திருப்தி அடைகின்றனர். இந்த ஒழுக்கமான அணுகுமுறை அவர்களின் செல்வம் காலப்போக்கில் தொடர்ந்து அதிகரிக்க உதவுகிறது.
பல்வகைப்படுத்தல்: சுவிஸ் முதலீட்டாளர்கள் தங்களுடைய எல்லைகளைக் கடந்து சிந்திக்கின்றனர். அவர்கள் சொத்துக்களை சேர்ப்பதில் மட்டுமல்லாமல், பிற நாடுகளில் வசிப்பிடம் மற்றும் குடியுரிமையும் பெற்று பன்முகப்படுத்துகின்றனர்.
பலர் மற்ற நாடுகளில் தங்களுடைய வசிப்பிடத்தை வைத்திருக்கிறார்கள். இது அதிக நிதி வாய்ப்புகள் மற்றும் வரி சேமிப்பிற்கு அவர்களுக்கு உதவுகிறது.
பொறுமை மற்றும் நீண்ட கால முதலீடு: சுவிஸ் கோடீஸ்வரர்கள் விரைவாக பணம் சம்பாதிப்பதை விரும்புவதில்லை. மாறாக பொறுமை மற்றும் நீண்ட கால கண்ணோட்டத்துடனும் செல்வத்தை உருவாக்குகின்றனர். உண்மையான செல்வம் என்பது பணத்தை விரைவாக சம்பாதிப்பது அல்ல, அதை நீண்ட காலத்திற்கு சேமித்து வைத்திருப்பது என்பதை உணர்ந்து செயல்படுகின்றனர்.
வீடுகளை வாங்குவதை விட வாடகை வீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்: அமெரிக்காவில் 65 % நபர்கள் சொந்த வீடுகளை வைத்திருக்கின்றனர். சுவிட்சர்லாந்தில் 41 % பேர் மட்டுமே சொந்த வீடுகளை வைத்திருக்கின்றனர். குறிப்பாக சுவிஸ் கோடீஸ்வரர்கள் சொந்த வீடுகளை வாங்குவதை விட வாடகை வீடுகளுக்கு தான் முன்னுரிமை அளிக்கின்றனர்.
வீடுகள் வாங்காததால் சேமிக்கப்பட்ட பணம் அதிக வருமானம் தரும் முதலீடுகளில் முதலீடு செய்யப்படுகிறது. இது வீட்டு உரிமையாளர் ஆவதை விட வேகமாக செல்வத்தை அதிகரிக்க உதவுகிறது.
சேமிப்பை வழக்கமாக்குதல்: சுவிஸ் குடும்பங்கள் மற்ற எதற்கும் செலவழிப்பதற்கு முன்பு தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை, அதாவது வருமானத்தில் 20 முதல் 30 சதவீதத்தை சேமிப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இந்த ஒழுக்கமான அணுகுமுறை காலப்போக்கில் நிலையான வருமானத்தை உருவாக்க உதவுகிறது.
திறன்களில் முதலீடு செய்தல்: சுவிட்சர்லாந்தில் கல்விக்காக மட்டுமல்ல, திறன் மேம்பாட்டிற்காகவும் செலவு செய்கின்றனர். சுவிஸ் நபர்கள் தங்கள் வருமானத்தில் 5-10% தொகையை தனிப்பட்ட வளர்ச்சிக்கு, குறிப்பாக மொழிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications