இந்திய மக்களுக்கு பால் மிகவும் அத்தியாவசியமான உணவு பொருட்களில் ஒன்றாகும், பல நூற்றாண்டுகளாக இந்திய உணவின் முக்கிய பகுதியாக பால் மற்றும் பால் பொருட்கள் உள்ளது. ஆனால், சமீபகாலமாக இந்தியாவில் பால் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் பல பகுதிகளில் சப்ளை டிமாண்ட் பிரச்சனை காரணமாகவும், இதர பல காரணத்திற்காகவும் பால் விலை உயர்ந்தது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில், பால் விலை மீண்டும் ஒரு முறை உயர்த்தப்பட்டு உள்ளது. பால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையில் அனைத்து தரப்பு மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது.

இதிலும் குறிப்பாக எழை மற்றும் நடுத்தர மக்களின் உணவு முறையில் சத்தான உணவு பொருளாக பால் மற்றும் பால் பொருட்கள் இருக்கும் வேளையில் பால் விலை உயர்வு பெரும் நிதியியல் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் சராசரியாக பாலின் ரீடைல் விலை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 12% அதிகரித்து லிட்டருக்கு ரூ.57.15 ஆக உள்ளது. இந்தியாவில் பால் விலை உயர்வுக்கு என்ன காரணம்..?
பால் விலை உயர்வுக்கு உற்பத்திச் செலவு அதிகரிப்பே முக்கியக் காரணம். உலக பால் உற்பத்தியில் 22% க்கும் அதிகமான பால் உற்பத்தியில் இந்தியா உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது. பால் உற்பத்தியில் மட்டும் அல்லாமல் பால் பொருட்கள் நுகர்விலும் இந்தியா முன்னோடியாக உள்ளது.
இந்தியாவில் பால் உற்பத்திச் செலவு அதிகரிப்பதற்கான முக்கியக் காரணம் மாடுகளுக்கான தீவனச் செலவு அதிகரிப்பு தான். இது பால் பண்ணை வைத்துள்ளவர்களின் மொத்த செலவில் பெரும் பங்கைக் கொண்டுள்ளது. தீவன தட்டுப்பாடு மற்றும் சோயாபீன், சோளம் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக தீவன விலை அதிகரித்து வருகிறது.

மழை காலத்தில் தீவனங்களின் விலை 12-15 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக மார்ச் 2023 உடன் முடிந்த நிதியாண்டில் பால் விலை 12 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதேவேளையில் இந்தியாவில் பால் பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2020-21 ஆம் நிதியாண்டில் பால் பொருட்கள் ஏற்றுமதி 321.96 மில்லியன் டாலராக இருந்த நிலையில் 2021-22 ஆம் நிதியாண்டில் இது 391.59 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது இந்தியாவில் சப்ளை டிமாண்ட் பிரச்சனையை உருவாக்கும் காரணத்தால் பால் விலை அதிகரிக்க வழிவகுக்கிறது.
மேலும் பால் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஊழியர்கள் சார்ந்த செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தாலும் பால் உற்பத்தியாளர்களின் செலவுகள் அதிகரித்துள்ளது. இதுவும் பால் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications