வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்காவில் கலை மற்றும் வரலாற்று பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்தவர்களை விட கணினி பொறியியல் பிரிவில் படிப்பை முடித்தவர்கள் மத்தியில் தான் வேலை வாய்ப்பின்மை விகிதம் 2 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் எல்லாம் அமெரிக்காவில் தான் அமைந்திருக்கின்றன. எனவே அமெரிக்கா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் கணினி அறிவியல் மற்றும் கணினி பொறியியல் சார்ந்த பிரிவுகளில் படிப்பை முடித்தவர்கள் அமெரிக்கா சென்றால் எளிதாக டெக் நிறுவனங்களில் வேலை பெற்று வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற ஒரு கருத்து உலகம் முழுவதும் இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக அது பொய்யாகி வருகிறது.

அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக கணினி அறிவியல் பொறியியல் பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் மத்தியில் வேலை வாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து இருப்பது தான் தற்போது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கி அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த ஒரு முக்கியமான தரவினை வெளியிட்டுள்ளது. பொதுவாகவே பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களுக்கு வழங்கப்படும் அறிவுரை என்னவென்றால் கலை பிரிவுகளில் பாடங்களை எடுத்து படித்தால் அவ்வளவு எளிதாக வேலை கிடைக்காது நல்ல சம்பளம் கிடைக்காது என்பதுதான்.
பெரும்பாலானவர்கள் கணினி பொறியியல் படிக்கலாம் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் சார்ந்த படிப்புகளை படித்தால் நல்ல வேலை கிடைக்கும் எதிர்காலத்தில் வாழ்க்கை நன்றாக இருக்கும் என அறிவுரை வழங்குவார்கள். தற்போது அந்த அறிவுரையை பொய்யாக்கும் வகையில் தான் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவு இருக்கிறது. அதாவது அமெரிக்காவில் தற்போது கணினி அறிவியல் மற்றும் கணினி பொறியியல் பிரிவில் படித்தவர்கள் தான் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள். தேசிய சராசரியை விட இது அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் கலை பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மத்தியில் வேலை வாய்ப்பின்மை 3 சதவீதம் அதுவே கணினி பொறியியல் பிரிவில் படிப்பை முடிந்தவர்கள் மத்தியில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 7.5 சதவீதம் என இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது, கணினி அறிவியல் பட்டதாரிகள் மத்தியில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 6.1 சதவீதம் என இருக்கிறது.
அதுவே ஊட்டச்சத்து அறிவியல் சார்ந்த பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மத்தியில் 0.04 சதவீதம் என மிகக் குறைவாகவே வேலை வாய்ப்பின்மை பதிவாகி இருக்கிறதாம். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அமெரிக்காவில் கல்லூரி பட்டப்படிப்பை முடித்தவர்கள் மத்தியில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 5.8 சதவீதம் என இருக்கிறது. இது மார்ச் மாதத்தில் 4.6 சதவீதமாக இருந்து ஏப்ரல் மாதத்தில் உயர்ந்து இருக்கிறது.
பிளாக் ராக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் ராபர்ட் கோஸ்டின் தற்போது வேலைவாய்ப்பு சந்தையில் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகள் அனைத்துமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திடம் சென்று விட்டன என கூறுகிறார். தற்போது கிரியேட்டிவ் திங்கிங் மற்றும் சாஃப்ட் ஸ்கில்ஸ் பிரிவுகளில் தான் வேலைக்கு மனிதர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள் எனவே தான் கலை சார்ந்த பிரிவுகளில் படிப்பை முடித்தவர்களுக்கு தற்போது நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கிறது என குறிப்பிடுகிறார்.


Click it and Unblock the Notifications