பெங்களூர்: தொடர் மழையால் பெங்களூர் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. இதனால் வாகன ஓட்டிகளும் அலுவலகம் சென்று வருபவர்களும் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இந்த சூழலில் அனுமதி கிடைத்தும் ஒரு குறிப்பிட்ட பிரிவில் மெட்ரோ ரயில் இயக்கம் தொடங்கப்படாமல் இருப்பது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகசந்திரா மற்றும் மாதவரா இடையிலான மூன்று கிலோமீட்டர் பகுதியில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சோதனை ஓட்டங்கள் முடிவடைந்து இங்கே கடந்த 20 நாட்களுக்கு முன்னரே மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து ரயில்களை இயக்க அனுமதி அளித்து விட்டார். அக்டோபர் 4ஆம் தேதியே அனுமதி வழங்கப்பட்டு விட்டாலும் இதுவரை பெங்களூர் மெட்ரோ நிர்வாகம் இந்த பகுதியில் மெட்ரோ ரயில் இயக்கத்தை தொடங்காமல் இருக்கிறது.

முறைப்படி தொடக்க விழா நடத்திய பிறகு மெட்ரோ ரயில்களை இந்த பாதையில் இயக்க பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாம்.
ஆனால் இந்த மூன்று கிலோமீட்டர் பாதை என்பது ஏற்கனவே பெங்களூரில் செயல்பாட்டில் இருக்கும் கிரீன் லைனில் நீட்டிக்கப்பட்ட பகுதியாகும். நாகசந்திராவிலிருந்து சில்க் இன்ஸ்டிடியூட் வரை இந்த ரயில் பாதையானது அமைந்துள்ளது.
இந்த புதிய ரயில் நிலையங்களுக்கிடையே மெட்ரோ ரயில் இயக்கத்தை தொடங்கி வைப்பதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் மனோகர் லால் கட்டார் தேதி கொடுப்பதற்காக பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான மோகன்தாஸ் பை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மக்களின் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அமைச்சர் மனோகர் லால் கட்டாரை டேக் செய்துள்ள அவர் தயவுசெய்து பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இந்த புதிய பாதையில் மெட்ரோ ரயில் இயக்கத்தை தொடங்குமாறு அறிவுறுத்துங்கள், நீங்கள் ஏன் இதை தாமதப்படுத்துகிறீர்கள் மக்கள் தினம்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுவதை காண்பது தான் உங்களது விருப்பமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல பல்வேறு மக்களும் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் தெற்கு பெங்களூர் எம்பியான தேஜஸ்வி சூர்யாவும் மாநில அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திறப்பு விழாக்களை எல்லாம் இல்லாமல் இந்த பகுதியில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications