பெங்களூரு: இந்தியாவின் ஸ்டார்ட் அப் மற்றும் ஐடி தலைநகரமாக பெங்களூரு இருக்கிறது. வெளிமாநில மக்களும் வெளிநாட்டை சேர்ந்த பலரும் தொழில் நோக்கத்திற்காகவும் வேலை நோக்கத்திற்காகவும் பெங்களூருக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.
பெங்களூருவில் வீட்டு உரிமையாளர்கள் அதிகபட்ச தொகையை டெபாசிட்டாக கேட்கின்றனர், வாடகை அதிகமாக இருக்கிறது, வீட்டை காலி செய்யும் போது டெபாசிட் தொகையில் பெரும்பாலான பணத்தை பிடித்துக் கொள்கின்றனர், வாடகைதாரர்களை மிக மோசமாக நடத்துகின்றனர் என தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களுடைய குமுறல்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர். அப்படி ஒரு வெளிநாட்டவர் பெங்களூருவில் ஒரு வாடகை வீட்டிற்கு செக்யூரிட்டி டெபாசிட் ஆக கேட்கப்படும் தொகையை குறிப்பிட்டு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது.

கேலப் ஃப்ரீசன் என்பவர் கனடா நாட்டை சேர்ந்தவர், டிஜிட்டல் கிரியேட்டராக இவர் இருக்கிறார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் இந்த உலகிலேயே பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் மிகவும் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள் என கடுமையான வார்த்தைகளால் சாடி இருக்கிறார். நோ புரோக்கர் தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் நான்கு படுக்கையறை கொண்டு ஒரு வீட்டிற்கு 23 லட்சம் ரூபாயை செக்யூரிட்டி டெபாசிட் ஆக கேட்கின்றனர் என குறிப்பிட்டு இருக்கிறார்.
12 மாத வாடகையை டெபாசிட் ஆக கேட்பார்களா என கேள்வி எழுப்பி இருக்கும் அவர் உலகின் மற்ற நகரங்களில் எல்லாம் செக்யூரிட்டி டெபாசிட் எவ்வளவு தெரியுமா என பட்டியலிட்டு இருக்கிறார். நியூயார்க் , சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் ஒரு மாத தொகையை டெபாசிட்டாக வழங்கினால் போதும், சான் பிரான்சிஸ்கோவில் இரண்டு மாத வாடகையை டெபாசிட் ஆக வழங்கும்படிதான் கூறுவார்கள். துபாயில் ஆண்டு வாடகையில் 5 முதல் 10% தொகையை டெபாசிட்டியாக செய்தால் போதும் ஆனால் பெங்களூருவில் 12 மாத வாடகை டெபாசிட்டாக கேட்கிறார்கள் என அவர் பதிவு செய்திருக்கிறார்.
அவர் பென்னிங்கனஹள்ளி பகுதியில் 4 படுக்கையறை கொண்ட ஒரு வீட்டினை வாடகைக்காக தேடி இருப்பது அந்த புகைப்படத்தின் மூலம் தெரிய வருகிறது. 4500 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டிற்கு மாதம் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வாடகை. இதற்கு 23 லட்சம் டெபாசிட் ஆக கேட்டிருப்பதும் அந்த படத்திலேயே இடம்பெற்றிருக்கிறது. அவருடைய பதிவுக்கு பெங்களூருவில் வாடகை வீட்டில் வசித்து வரும் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.
ஒரு பயனர் உலகிலேயே அதிக வாடகை கொண்ட நகரமாக ஹாங்காங் தான் இருக்கிறது ஆனால் இங்கே இரண்டு மாத வாடகை மட்டுமே டெபாசிட் ஆக செய்தால் போதும் என கூறியிருக்கிறார் .ஒரு பயனர் இந்தியாவில் சென்னை ,டெல்லி , ஹைதராபாத் ஆகிய நகரங்களில் எல்லாமே ஒரு மாதம் வாடகை தான் கேட்பார்கள், ஆனால் இங்கே மட்டும் தான் இந்த நிலைமை எனக் கூறியிருக்கிறார்.
சில சமயங்களில் வாடகைதாரர்கள் வாடகை கொடுக்காமல் திடீரென வீட்டை காலி செய்கின்றனர் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக தான் இப்படி அதிக தொகையை டெபாசிட் ஆக கேட்கிறார்கள் என ஒரு நபர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications