1947ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு ஆண்டு. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து இந்தியா தனிநாடாக உதயமான ஆண்டு. ஆனால் உண்மையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க தேர்வு செய்யப்பட்ட ஆண்டு 1948. ஆனால் ஓராண்டுக்கு முன்னரே அவர்கள் விடுதலை வழங்கியதன் காரணத்தை நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் வணிக நோக்கத்திற்காக காலடி வைத்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக நாட்டையே கைப்பற்றி ஆட்சி புரிந்தனர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் பல வழிமுறைகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இருந்தாலும் ஆங்கிலேயர்கள் அந்த போராட்டங்களை ஒடுக்கினர் . இதனிடையே 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இந்த போர் ஆங்கிலேயர்களுக்கு நிதி ரீதியாகவும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

1945ஆம் ஆண்டில் தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. அப்போது பிரிட்டன் அரசின் கஜானா காலியாக இருந்தது. இதனால் சொந்த நாட்டை நிர்வகிக்கவே நிதி ஆதாரம் இல்லாமல் தவித்தது பிரிட்டன் அரசு. இதற்கிடையே இந்திய சுதந்திர போராட்டம் 1940க்கு பிறகு தீவிரமடைந்தது. இந்த சூழலில் தான் 1945ஆம் ஆண்டு பிரிட்டனில் பொது தேர்தல் ஏற்பட்டது. அப்போது பிரிட்டன் தொழிலாளர் கட்சி இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளுக்கு விடுதலை அளிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது.
பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிஆட்சியைப் பிடித்ததது. பிரதமராக கிளமெண்ட் அட்லீ பொறுப்பேற்றார். காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்குவதற்கான சட்ட நடைமுறைகளை தொடங்கினார். 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் கிளமெண்ட் அட்லீ 1948 ஜூன் மாதத்துக்குள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அந்த சமயத்தில் இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இடையிலான பிரச்னை வலுத்திருந்தது. 1947 பிப்ரவரி 10ஆம் தேதி தான் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பொறுப்பேற்றார். அவர் சுதந்திரம் வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தலைவர்களிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுகள் எட்டப்படவில்லை.
ஏனெனில் முகமது அலி ஜின்னா, இஸ்லாமியர்களுக்கு தனிநாடு என்ற கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். இதனால் நாட்டில் மக்களிடையே பதற்றமான சூழல் உருவானது. ஆங்கிலேயர்கள் இவ்வளவு பெரிய பிரச்னை ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக மவுண்ட்பேட்டன் சுமூகமாக முடியும் என எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கவில்லை. நாட்டில் கலவரம், வன்முறை , மக்கள் உயிரிழப்பு ஆகியவை ஏற்படும் என்பதை அவர் கணிக்கவில்லை. எனவே 1948 ஜூன் வரை காத்திருப்பது பெரிய ஆபத்தில் கொண்டு போய் முடியும் என உணர்ந்தார். இதனால் முன்னதாகவே சுதந்திரம் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எனவே மவுண்ட்பேட்டன் தான் 1947ஆம் ஆண்டிலேயே சுதந்திரம் வழங்கிவிட வேண்டும் என முடிவெடுத்தார். குறிப்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி என்பதையும் அவரே முடிவு செய்தார். இதன் பின்னணி குறித்து அடுத்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்..
Story written by: Devika


Click it and Unblock the Notifications