டெல்லி: இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பின்மை பிரச்சனை பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளிவந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் கணித்த பாதையில் வளர்ச்சி அடையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யக்கூடிய மத்திய பட்ஜெட்டில் வேலை வாய்ப்பின்மை பிரச்சனையை போக்கக்கூடிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக நீண்ட கால அடிப்படையில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இல்லை எனில் இந்தியாவுக்கு வரமாக இருக்கக்கூடிய மக்கள் தொகையே இந்தியாவுக்கு சாபமாக மாறிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் தேசிய சர்வே அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி இந்திய நகர்ப்புற பகுதிகளில் 15 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களிடையே வேலை வாய்ப்பின்மை 6.4 சதவீதமாக இருக்கிறது. இது முந்தைய காலாண்டில் இருந்த 6.6 சதவீதத்தை விட சற்றே குறைந்துள்ளது.
அதேபோல இந்திய தொழிலாளர்களில் பெண்களின் பங்களிப்பு கணிசமான அளவு உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2017- 18 ஆம் நிதி ஆண்டில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 23 சதவீதமாக இருந்து 2023-24 ஆம் ஆண்டில் அது 41.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முன்னணி பொருளாதார நிபுணர்களோடு ஆலோசனை நடத்தினார். அப்போது பலரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை போக்க வேண்டும் அதற்கு அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர். கடந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்க 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு நிதி தொகுப்பு திட்டத்தை அறிமுகம் செய்தார்.
20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு, மேற்படிப்புக்கு செல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் வழங்குவது , அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 1 கோடி இளைஞர்களுக்கு நாட்டின் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பயிற்சி வாங்கி தருவது என்பன உள்ளிட்ட முக்கியமான திட்டங்களை அறிவித்தார்.
அதாவது நாட்டில் வேலை வாய்ப்பு இன்மை பிரச்சனையை போக்குவதற்காகவும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதற்காகவும் 5 திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால் இது போதாது என்கின்றனர் நிபுணர்கள்.
இந்தியாவில் தற்போது லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் படிப்பை முடித்து விட்டு வேலை வாய்ப்பு தேடி வருகிறார்கள்.
அந்த எண்ணிக்கைக்கு ஏற்றபடி இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லை என்பது ஒரு பிரச்சனை, அப்படியே இருந்தாலும் கல்லூரி முடிந்து வரக்கூடிய இளைஞர்களிடம் அதற்கான திறன்கள் இல்லாமல் இருப்பது மற்றொரு பிரச்சனை என்கின்றனர். எனவே அரசு நகர்ப்புறங்கள் மட்டுமில்லாமல் கிராமப்புறங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் 2024 இல் இருந்து 2029 ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் மட்டுமே நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணித்த பாதையில் செல்லும் என்கிறது கோல்ட்மேன் சச்ஸ் அமைப்பு. எனவே அரசு இதையெல்லாம் கவனத்தில் கொண்டு வேலைவாய்ப்பை உருவாக்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications