உலகில் உள்ள பெரும்பாலான பெரிய நிறுவனங்களில், தலைமைச் செயல் அதிகாரிகளின் (CEO) வருமானம், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் சராசரி ஊழியர்களின் சம்பளத்தை விட பல நூறு மடங்கு அதிகமாக இருப்பது ஒரு பொதுவான விவாத பொருளாக உள்ளது. ஒரு CEO-வின் சம்பளம் இவ்வளவு அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் என்ன, குறிப்பாக சமீபத்திய தரவுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
டெஸ்லா CEO எலான் மஸ்க்: டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்-கின் ஊதியம் சமீபத்தில் உலக செய்தியாக மாறியது. அவருக்கு அங்கீகரிக்கப்பட்ட ஊதியத் தொகுப்பு தோராயமாக 1 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.82 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது வெறும் சம்பளம் அல்ல. இது டெஸ்லா நிறுவனத்தின் செயல்திறன் இலக்குகளை அவர் அடைந்தால் அவருக்கு வழங்கப்படும் பங்குகள் மற்றும் ஊக்கத்தொகைகளின் மதிப்பாகும்.

இந்த ஊதியத்தை, சராசரி டெஸ்லா ஊழியர்களின் சம்பளத்துடன் ஒப்பிட்டால் மிகப்பெரிய வித்தியாசம். எலான் மஸ்க் பெறும் பங்கு சார்ந்த இந்த ஊதியம், டெஸ்லாவின் சராசரி ஊழியர் ஒருவர் பெறும் சம்பளத்தை விட பல ஆயிரம் மடங்கு அதிகமாகும். டெஸ்லாவை பொறுத்தவரை, எலான் மஸ்க் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு அவசியம் என்று பங்குதாரர்கள் நம்புவதால், இந்த ஊதியம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்போசிஸ் சி.இ.ஓ. சம்பளம்: இந்திய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ்-ஸை எடுத்துக்கொண்டால், அதன் CEO-வின் சம்பளத்திற்கும், மற்ற ஊழியர்களின் சம்பளத்திற்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. சம்பளம் ரூ.80.6 கோடியாகும்.
நிறுவனத்தின் சராசரி சம்பளம் (Median Salary) : இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் சி.இ.ஓ. சம்பளம், அந்த நிறுவனத்தின் சராசரி ஊழியரின் சம்பளத்தை விட சுமார் 200 முதல் 300 மடங்குக்கும் அதிகமாக இருக்கக் கூடும் என்று சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு தலைமைச் செயல் அதிகாரிக்கு மிக அதிக சம்பளம் வழங்கப்படுவதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணங்கள் பல உள்ளன.
முடிவெடுக்கும் அதிகாரம் மற்றும் பொறுப்பு: நிறுவனத்தின் வெற்றி அல்லது தோல்விக்கான ஒட்டுமொத்தப் பொறுப்பும் CEO-வையே சாரும். சந்தை வியூகம், புதிய முதலீடுகள், நிர்வாக முடிவுகள் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் இவர்களுக்கு அதிகப் பொறுப்பு இருப்பதால், அதற்கு ஈடாக அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.
திறமைக்கான தேவை: உலகளாவிய நிறுவனங்களை வழிநடத்தும் தனித்துவமான தலைமைத்துவ திறமை, தொலைநோக்கு சிந்தனை மற்றும் அனுபவம் கொண்டவர்கள் மிக சிலரே. அத்தகைய அரிய திறமைக்கு அதிக விலை கொடுக்க நிறுவனங்கள் தயாராக உள்ளன.
சிஇஓவை தக்க வைக்கும் நிறுவனங்கள்: ஒரு திறமையான CEO-வை இழக்க எந்த நிறுவனமும் விரும்புவதில்லை. எனவே, போட்டியாளர் நிறுவனங்கள் அந்த CEO-வை தங்கள் பக்கம் இழுத்து செல்லாதவாறு, அவர்களை தக்கவைக்க மிக அதிக ஊதியங்களை கொட்டித் தருகின்றன.
இதேபோல் இந்த அதிகப்படியான சம்பளத்தை ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் விதிக்கப்பட்ட இலக்குகளை பொறுத்தும், இந்த சிஇஓ இலக்கை அடையும் பட்சத்தில் மட்டுமே பங்குகளாகவும், பணமாகவும் கொடுக்கப்படுகிறது. வெறுமனே இந்த பதவியில் இருப்போருக்கு அதிகப்படியான சம்பளத்தை அள்ளிக்கொடுப்பது இல்லை.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும், இத்தகைய அதிக சம்பள வேறுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிப்பதாக பல பொருளாதார வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர். அதே சமயம், நிறுவனத்தின் மதிப்பை உயரத்திற்குக் கொண்டு செல்லும் தலைவர்களை பணத்தின் மூலம் அங்கீகரிப்பது தவிர்க்க முடியாதது என்றும் மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.


Click it and Unblock the Notifications