இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (பிப்ரவரி 17) அதிகாலையில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து தான் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டெல்லியை மையமாகக் கொண்டு வட இந்தியா முழுவதும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நில அதிர்வின் தாக்கம் 4.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். 4.0 என்ற அளவிற்கே கட்டிடங்கள் பலமாக குலுங்கியதே மக்கள் பெருமளவில் அச்சம் அடைய காரணமாகிவிட்டது.

டெல்லியை பொறுத்தவரை அடிக்கடி நில அதிர்வு ஏற்படக்கூடிய ஒரு பகுதி தான். 2020 ஆம் ஆண்டில் மட்டும் இங்கே 3.0 ரிக்டர் அளவிற்கு மேல் மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன . அதை தொடர்ந்து பலமுறை நில அதிர்வுகளும் உணரப்பட்டன.
டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின் படி டெல்லி நில அதிர்வு மண்டலம் நான்கில் (Seismic Zone 4) அமைந்துள்ளது. அதிக பூகம்ப ஆபத்து கொண்ட பகுதியை தான் இந்த மண்டலத்தின் கீழ் வரையறுப்பார்கள். எனவே இங்கு நில அதிர்வுகள் மிகவும் அதிகமாக இருக்கும்.
சில சமயங்களில் 5-6 ரிக்டர் அளவிலும் சில நேரங்களில் 7-8 ரிக்டர் அளவிலும் இங்கே நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும். ஆனால் இந்த நில அதிர்வு மண்டலம் என்பது காலமாற்றத்திற்கு ஏற்ப மாறுபடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1970 களிலிருந்து டெல்லியை பொறுத்தவரை ஐந்து முறை 5.0 ரிக்டர் அளவுக்கு மேல் நில நடுக்கங்கள் பதிவாகி இருக்கின்றன.
பூமியின் மெல்லிய வெளிப்புற அடுக்கு, டெக்டானிக் தகடுகள் எனப்படும் பெரிய மற்றும் திடமான பாறை தட்டுகளால் ஆனது. இந்த பாறை தட்டுகள் மெதுவாக நகரும்போது இது போன்ற நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன. டெல்லி உட்பட வட இந்திய பகுதியில் இந்திய டெக்டானிக் தட்டுகள் யுரேசிய தட்டுகளோடு மோதுவதன் காரணமாகவே அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகிறது.
டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படக்கூடிய நில அதிர்வுகள் டெல்லி ஹார்ட் ரிஜ் எனப்படும் ஒரு முக்கிய புவியியல் கட்டமைப்போடு தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. இது கங்கை நதி படுகையின் கீழே இருக்கும் ஆரவல்லி மலைப்பகுதியுடன் தொடர்புடைய தகடுகளோடு சம்பந்தப்பட்டது என சொல்லப்படுகிறது.
டெல்லி நில அதிர்வு மண்டலம் நான்கில் இருந்தாலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என கூறுகிறது. 1997 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட India vulnerability atlas தகவலின் படி டெல்லியில் நிலநடுக்கத்தால் 6. 5 சதவீத வீடுகள் அதிக சேத அபாயத்தையும் , 85 சதவீத வீடுகள் மிதமான சேத அபாயத்தையும் கொண்டிருப்பதாக கூறுகிறது.
டெல்லியில் தற்போது வானுயர கட்டிடங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவை இதுபோன்ற நிலநடுக்கம் சம்பந்தமான தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில் கட்டப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது. அவ்வாறு இல்லை என்றால் பெரிய அளவில் நில அதிர்வு ஏற்படும் போது பெரிய அளவில் சேதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications