திருப்பதி : பயபக்தியுடன் பெருமாள் பக்தர்கள் வாங்கி செல்லும் லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு கொண்டு தயாரிக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் கொள்முதல் செய்யப்படும் நிறுவனம் மாற்றப்பட்டதே இதன் பின்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆந்திராவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதனை அடுத்து தான் இந்த நெய் விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டு தனித்துவமான ருசியை கொண்டு இருக்கிறது. இந்த திருப்பதி லட்டுக்களை பொருத்தவரை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களால் வாங்கி உண்ணப்படுகிறது . லட்டின் ருசிக்கு முக்கிய காரணம் அதில் பயன்படுத்தப்படும் நெய்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் நெய் வாங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தம் கோருகிறது. அவ்வாறு ஒப்பந்தம் பெற்றுக் கொள்ளப்படும் நிறுவனங்களிடமிருந்து லட்சக்கணக்கிலான கிலோவில் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதற்கு முன்பு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஆந்திராவில் ஆட்சியில் இருந்தபோது கர்நாடகா பால் கூட்டமைப்பான நந்தினி நிறுவனத்திடம் இருந்துதான் நெய் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நந்தினி நிறுவனம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு லட்டு தயாரிப்பதற்கான நெய்யை விற்பனை செய்து வருகிறது.
ஆனால் கடந்த ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு நந்தினி நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டது. ஏனெனில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நெய் கொள்முதலுக்கான ஒப்பந்த புள்ளியில் கர்நாடக பால் கூட்டமைப்பு நிறுவனமான நந்தினி பங்கேற்கவில்லை.
இதற்கு முக்கியமான காரணம் நந்தின் பிராண்டின் உரிமையாளரான KKMF அமைப்பு கடந்த ஆண்டுதான் இந்த நிறுவனம் தங்களின் பால் மற்றும் நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது. எனவே தங்களால் குறைந்த விலையில் ஒப்பந்தம் கோர முடியாது எனக் கூறி நந்தினி நிறுவனம் பங்கேற்காமல் வெளியேறிவிட்டது.
இதனை அடுத்து தான் வேறொரு நிறுவனத்திற்கு நெய் கொள்முதல் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அப்போதே கர்நாடகா பால் கூட்டமைப்பின் தலைவரான பீமா நாயக் ”திருப்பதி லட்டு இதற்கு முன்பு வழங்கப்பட்ட அதே ருசியில் உங்களுக்கு கிடைக்காது. சந்தையிலே மிகத்தரம் வாய்ந்த நெய்யினை நந்தினியை நிறுவனம் தான் வழங்குகிறது. எங்களை விட குறைவான விலைக்கு ஒரு நிறுவனம் நெய் வழங்குகிறது என்றால் அது தரம் குறைந்ததாக இருக்கும்” என கூறினார்.
இதனிடையே பாரதி ஜனதா கட்சியினர் சித்திராமையா தலைமையிலான கர்நாடக அரசு திருப்பதி கோயில் நிர்வாக பிரச்சனைகளில் தலையிட்டு அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினர்.
மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசு வேறு நிறுவனத்திடம் இருந்து நெய்யை கொள்முதல் செய்ய வேண்டுமென திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு நிர்ப்பந்தம் அளித்ததாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தான் கடந்த ஜூன் மாதம் தேவஸ்தான நிர்வாகம் நெய் தரம் குறைவாக இருப்பதை அறிந்து ஆய்வு செய்து அதனை தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தது. தேசிய ஆய்வகம் அந்த நெய்யில் பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications