இந்தியாவில் கடந்த ஒருவருடமாகக் கொரோனாவுக்கு அடுத்து மக்களைக் கடுமையாகப் பாதித்து வருவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தான்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வந்த காரணத்தால் மக்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தது.
இந்நிலையில் இன்று வழக்கத்திற்கு மாறாகப் பெட்ரோல் விலை உயர்ந்த வேளையில், டீசல் விலை குறைந்துள்ளது. இது சாமானிய மக்கள் மத்தியில் பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி
இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக விலைவாசி உயர்வு இருக்கிறது என ரிசர்வ் வங்கி உட்பட அனைத்து தரப்பினரும் கடந்த சில வாரங்களாகவே மத்திய அரசுக்குத் தெரிவித்து வரும் நிலையிலும், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் காதில் வாங்காமல் தொடர்ந்து விலையை உயர்த்தி வந்தது.
கார் , பைக் முதல் பால் விலை வரை
ஆனால் கடந்த ஒரு வாரத்தில் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகமான காரணத்தால் அனைத்துக் கார் மற்றும் பைக் மாடல்களின் விலையை உயர்த்த துவங்கியுள்ளது. இதே காரணத்தால் அமுல் நிறுவனமும் பால் விலையை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
மூலப்பொருட்கள் விலை உயர்வு
இதேவேளையில் உலகளவில் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லாமல் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையிலும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டீசல் விலை குறைப்பு
இந்தச் சூழ்நிலையில் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் விதமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக நாட்டின் சரக்குப் போக்குவரத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் டீசல் விலையைக் குறைத்துள்ளது மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள்
இதேவேளையில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மத்தியிலான கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்த பிரச்சனை முழுமையாக இன்னமும் முடியாத நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.35 சதவீதம் சரிந்து 74.30 டாலருக்கும், ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.37 சதவீதம் சரிந்து 75.27 டாலருக்கும் சரிந்து விற்பனை செய்யப்படுகிறது.
சாமானிய மக்கள்
கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், இதன் நன்மையை டீசலுக்கு மட்டுமே அளித்துள்ளது இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள். சாமானிய மக்கள் தினமும் அதிகம் பயன்படுத்தும் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை
இன்று வெளியான அறிவிப்பில் இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 28-30 பைசா வரையில் உயர்த்தி உள்ளது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலையை 14 முதல் 16 பைசா வரையில் குறைத்துள்ளது. இன்றைய விலை உயர்வின் மூலம் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107 ரூபாயைத் தொட்டு உள்ளது.
பெட்ரோல் விலை நிலவரம்
இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை : 101.92 ரூபாய்
டெல்லி : 101.19 ரூபாய்
கொல்கத்தா : 101.35 ரூபாய்
மும்பை : 107.20 ரூபாய்
பெங்களூர் : 104.58 ரூபாய்
ஹைதராபாத் : 105.15 ரூபாய்
கோழிக்கோடு : 101.60 ரூபாய்
டீசல் விலை நிலவரம்
இன்று டீசல் விலை குறைந்துள்ளதன் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை நிலவரம்
- சென்னை : 94.24 ரூபாய்
- டெல்லி : 89.72 ரூபாய்
- கொல்கத்தா : 92.81 ரூபாய்
- மும்பை : 97.29 ரூபாய்
- பெங்களூர் : 95.09 ரூபாய்
- ஹைதராபாத் : 97.78 ரூபாய்
- கோழிக்கோடு : 94.85 ரூபாய்


Click it and Unblock the Notifications