பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் நகரங்களில் தான் இருக்கும் என்ற நிலையை மாற்றி இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நகரங்களிலும் அதனை சாத்தியப்படுத்திய ஒரு நிறுவனம் தான் டிமார்ட் (DMart). இந்திய சில்லறை விற்பனை துறையில் அசுர வளர்ச்சி கண்டுள்ள டிமார்ட், மற்ற போட்டி நிறுவனங்களை விட குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்தாலும், தொடர்ந்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் எப்போது சென்றாலும் டிமார்ட் கடைகள் கூட்டமாகவே தான் இருக்கும்.
டிமார்ட்டின் தனித்துவமான பிஸ்னஸ் மாடல் தான் இதற்கு காரணம். மற்ற சில்லறை விற்பனை நிலையங்களை போல டிமார்ட் அடிக்கடி தள்ளுபடி விற்பனைகளோ, சிறப்பு விழா கால கூப்பன்களையோ வழங்குவதில்லை. மாறாக, ஆண்டின் அனைத்து நாட்களிலும் அனைத்து பொருட்களையும் Everyday Low Price என்ற கோட்பாட்டில் விற்பனை செய்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் எப்போது சென்றாலும் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இது வாடிக்கையாளர்களை தொடர்ந்து டிமார்ட்டை நோக்கி வரவைக்கிறது.

பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் அதிக வாடகை கொடுத்து வணிக வளாகங்களிலோ அல்லது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலோ கடைகளை அமைக்கின்றன. இதன் காரணமாக அவற்றின் வருவாயில் 5 முதல் 7 சதவீதம் வரை வாடகைக்கே செலவாகிறது. ஆனால், டிமார்ட் இந்த வழக்கத்திற்கு மாறாக தன் கடைகளுக்கு சொந்தமான இடங்களை வாங்குவதில் கவனம் செலுத்துகிறது.
நகர்ப்புறங்களின் வெளிப்பகுதிகளிலோ அல்லது அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்பு பகுதிகளிலோ பெரிய நிலங்களை வாங்கி, சொந்த கடைகளை உருவாக்குகிறது. இதனால் வாடகை சுமை டிமார்ட்டுக்கு கிடையாது, அந்தச் சேமிப்புத் தொகை வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்கவும் லாபம் பார்க்கவும் வழிவகை செய்கிறது.
இந்திய எஃப்.எம்.சி.ஜி சந்தையில் சப்ளையர்களுக்கு பணம் செலுத்த பொதுவாக 12 முதல் 21 நாட்கள் அவகாசம் எடுத்து கொள்ளப்படும். ஆனால், டிமார்ட் பொருட்களை பெற்ற சில 2 முதல் 3 நாட்களிலேயே சப்ளையர்களுக்கு தனது கணக்கை முழுமையாக செலுத்திவிடுகிறது. இதனால் உற்பத்தியாளர்களும் சப்ளையர்களும் டிமார்ட்டுக்கு மிகப்பெரிய அளவில் தள்ளுபடியை வழங்குகிறார்கள். இந்த முறையில் பொருட்கள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால், குறைந்த விலையில் விற்கப்பட்டாலும் நல்ல லாபம் பார்க்க முடிகிறது.
ஆடம்பரமான விளம்பரங்கள், கண்ணைக் கவரும் வேலைப்பாடுகள் போன்றவற்றுக்கு டிமார்ட் அதிக பணம் செலவழிப்பதில்லை. கடைகள் எளிய முறையில், கிடங்கு போன்ற அமைப்புடனேயே இருக்கும். டிமார்ட் தனது கடைகளில் அதிகம் விற்றுப்போகும், அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. விற்காத பொருட்களை வாங்கி குவித்து வைப்பதில்லை.
இதனால் பொருட்கள் வேகமாக விற்று தீருவதால் குறைந்த லாபம் இருந்தாலும், ஆண்டு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான விற்பனை நடப்பதன் மூலம் ஒட்டுமொத்த லாபம் பெருமளவில் அதிகரிக்கிறது. குறைந்த விலையில் வாங்கு, அதிகமாக வாங்கு, குறைந்த விலையில் விற்பனை செய் என்பது தான் இவர்களின் பிஸ்னஸ் மாடல்.
சொந்த கட்டடங்கள் மூலம் வாடகையைக் குறைப்பது, உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்தமாக குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி உடனுக்குடன் பணம் செலுத்துவது, விளம்பரங்கள் மற்றும் ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது போன்ற எளிய ஆனால் வலிமையான வணிக உத்திகளையே டிமார்ட் பின்பற்றுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சந்தையில் குறைந்த விலையில் தரமான பொருட்களை வழங்க முடிவதோடு, நிறுவனமும் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகிறது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் 68,000 கோடி ரூபாய் வருமானமும் 2,970 கோடி ரூபாய் லாபமும் ஈட்டியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

