தினமும் ரூ100 கோடி செலவு.. ஆனாலும் பெங்களூரு சாலைகளில் இத்தனை குழிகளா? எங்கே போகிறது இவ்வளவு பணம்?

இந்தியாவின் சிலிகான் வேலி, ஸ்டார்ட்-அப்களின் தலைநகரம் என புகழப்படும் பெங்களூரு நகரம், இன்று குழிகளின் தலைநகரம் என அழைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெங்களூருவின் வளர்ச்சிக்காக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக புள்ளி விவரங்கள் அதிர வைக்கின்றன. ஆனால், அதே பெங்களூரு வீதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளோ, ஒவ்வொரு அடியிலும் குழி இருக்கிறதே என புலம்புகிறார்கள்.

மழை பெய்தால் குளம், வெயில் அடித்தால் தூசி, போதாத குறைக்கு எலும்பை முறிக்கும் சாலை குழிகள் - இதுதான் இன்றைய பெங்களூருவின் எதார்த்த நிலை. கோடிக்கணக்கான வரிப்பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டும், ஒரு சாதாரண குழியை கூட மூட முடியாதது ஏன்? அரசாங்கம் ஒதுக்கும் நிதி உண்மையில் சாலைகளுக்கு சென்றடைகிறதா அல்லது இடையில் காணாமல் போகிறதா? சிலிகான் சிட்டியின் சாலை அவலங்கள் குறித்த ஒரு விரிவாக தெரிந்து கொள்வோம்.

தினமும் ரூ100 கோடி செலவு.. ஆனாலும் பெங்களூரு சாலைகளில் இத்தனை குழிகளா? எங்கே போகிறது இவ்வளவு பணம்?

சிலிக்கான் வேலி என்று கூறப்படும் பெங்களூரு சாலைகளில் குழிகள் ஏன் இன்னும் குறையவில்லை. அடிப்படை வசதிகள் ஏன் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. இது குறித்த ஜனக்ரஹா அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கையானது, அதிர்ச்சிகரமான நிதி உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

பெங்களூரு சர்வதேச மையத்தில் நடைபெற்ற பெங்களூர் விவாதங்கள் நிகழ்ச்சியில், நகரின் பொது செலவினங்கள் குறித்து முன் வைக்கப்பட்ட தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர வைப்பவையாக உள்ளன. கடந்த 2021 - 22ம் நிதியாண்டில் மட்டும் பெங்களூரு நகருக்காக செலவிடப்பட்ட தொகை சுமார் 38,455 கோடி ரூபாயாகும். இதை சரியாக கணக்கு போட்டு பார்த்தால் ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறது. ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில் இந்த தொகையை எந்த ஒரு அரசு இணைய தளத்திலோ அல்லது அதிகாரப்பூர்வ ஆவணத்திலோ பார்க்க முடியாது. சுமார் 70-க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஆவணங்களை திரட்டி, துண்டு துண்டான தகவல்களை இணைத்து தான் இந்த 38,455 கோடி ரூபாய் என்ற எண்ணிக்கையை ஜனக்ரஹா குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

மூன்று வழிகளில் செலவு?

பெங்களூருவின் வரிப்பணம் மூன்று பிரதான வழிகளில் செலவிடப்படுகிறது.

1. மாநகராட்சி (முன்னாள் BBMP) தற்போது ஐந்து அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள மாநகராட்சி நிர்வாகம்.

2. அரசு துறைகள்: சுகாதாரம், கல்வி போன்ற மாநில அரசின் துறைகள்.

3. சுயாட்சி அமைப்புகள் (Parastatals): குடிநீர் (BWSSB), மின்சாரம் (Bescom), போக்குவரத்து (BMTC/Metro) போன்ற சேவைகளை வழங்கும் அமைப்புகள்.

நகரத்திற்காக செலவு செய்யும் 29 பொது அதிகார அமைப்புகளில், பலவற்றின் தரவுகள் நம்பகத்தன்மை கொண்டதாக இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

வெறும் 20% மட்டுமே மக்களால் கேட்க முடியும்?

இந்த ஆய்வில் வெளிவந்த மற்றொரு மிக முக்கியமான தகவல், பெங்களூருவின் மொத்த செலவினத்தில் வெறும் 20% மட்டுமே மாநகராட்சி (BBMP) மூலம் செலவிடப்படுகிறது. அதாவது, நீங்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் கவுன்சிலர்களிடம் 20% பணத்திற்கு மட்டுமே கணக்கு கேட்க முடியும். மீதமுள்ள 80% பணம், யாராலும் நேரடியாக கேள்வி கேட்க முடியாத பெஸ்காம் (Bescom), மெட்ரோ (BMRCL) போன்ற சுயாட்சி அமைப்புகளால் செலவிடப்படுகிறது. இதில் பெஸ்காம் மட்டும் 47.3% நிதியை செலவிடுகிறது. மெட்ரோ 13.4%மும், குடி நீர் வாரியம் 8.80% நிதியையும் செலவு செய்கின்றன.

இதில் நிதி எங்கே போகிறது என்று கேட்டால். சரியான பதில் இல்லை. இந்த அமைப்பும் வெறும் 34% தகவல்களை மட்டுமே வெளியில் சொல்கின்றன. இதில் BBMP எனப்படும் பெங்களூரு மாநகரின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்திற்கு பொறுப்பான ஒரு அமைப்பாகும். இது ஓரளவுக்கு தரவுகளை பகிர்ந்தாலும், அதிலும் பல ஓட்டைகள் உள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர் வாரியமோ வெறும் 20% தகவல்களை மட்டுமே பகிர்வதாகவும், ஸ்மார்ட் சிட்டி & சாலை மேம்பாட்டு கழகம்(KRDCL ) மிக மோசமாக 13% மட்டுமே வெளிப்படை தன்மையுடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தான் மோசம் என நினைத்தால், பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை (BSWML) மற்றும் பெங்களூரு ஸ்மார்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் (B-SMILE) ஆகிய அமைப்புகள், தாங்கள் செய்யும் செலவுகள் குறித்து எந்த ஒரு தகவலையும் (0%) வெளியிடுவதில்லையாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் 7,000 கோடி ரூபாய் நிதியில் தொடங்கப்பட்ட B-SMILE மற்றும் BSWML போன்ற அமைப்புகள் பொதுவெளியில் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதற்கு கடந்த 2026 - 27ம் நிதியாண்டு பட்ஜெட்டில் 3,200 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரையில் ஒரு செயல்பாட்டு இணையதளம் கூட இல்லை.

தீர்வு என்ன?

1. ஒரே குடைக்கீழ் நிதி: அனைத்து பொது அமைப்புகளையும் ஒரே நிதி வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

2. சிட்டி டேஷ்போர்டு: பெங்களூருவின் மொத்த செலவுகளையும், மக்கள் ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் இணையதளத்தை உருவாக்க வேண்டும்.

3. வார்டு வாரியாக கணக்கு: ஒவ்வொரு வார்டுக்கும், ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வளவு செலவிடப்பட்டது என்ற விவரத்தை மக்கள் படிக்கக்கூடிய வடிவில் வெளியிட வேண்டும்.

இதுபோன்று நிதியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மட்டுமே பெங்களூரு மாறும் என்பதே அந்த விவாதத்தின் சாரம்சமாகவும் உள்ளது. தினமும் 100 கோடி ரூபாய் செலவாகும் ஊரில், மக்கள் இன்னும் குழிகளுடன் போராடுவது நியாயமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+