ஏப்ரல் 1ல் இருந்து ஏன் நிதியாண்டு தொடக்கம்? ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு?

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 வந்தாலே நமக்கு ஏப்ரல் ஃபூல் தான் நினைவுக்கு வரும். ஆனால் அதே நாளில்தான் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் ஒரு புதிய கணக்கை தொடங்குகிறது. உலகமே ஜனவரியை பின்பற்றும் போது, இந்தியா மட்டும் ஏன் ஏப்ரலை பிடித்து கொண்டிருக்கிறது? என்ற கேள்வி உங்களுக்குள் என்றாவது எழுந்ததுண்டா?

இதற்கு பின்னால் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற ஒரு ராஜதந்திர ரகசியம் மட்டுமல்ல, இந்தியாவின் ஆணிவேரான விவசாயம் மற்றும் பருவமழையின் கணக்குகளும் ஒளிந்துள்ளன. 1867-இல் தொடங்கிய இந்த 150 ஆண்டுகால மரபு இன்றும் தொடர்வது ஏன்? சரித்திரம் சொல்லும் அந்த சுவாரசியமான காரணங்களை அலசுவோம் வாருங்கள்.

ஏப்ரல் 1ல் இருந்து ஏன் நிதியாண்டு தொடக்கம்? ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு?

இந்த புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் கொஞ்சம் வரலாற்றை பற்றியும் தெரிந்து கொள்வோமா. ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான இந்த நிதியாண்டானது, நமது அன்றாட பொருளாதார வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும். சம்பளம் வாங்குவோர் தங்கள் வரி திட்டமிடலை இதை கொண்டே செய்கிறார்கள். நிறுவனங்கள் தங்கள் வருமான வரி கணக்குகளை இதன் அடிப்படையிலேயே முடிக்கின்றன. மத்திய அரசு தனது பட்ஜெட்டை இதற்கேற்பவே உருவாக்குகிறது. புதிய நிதியாண்டு தொடங்கியிருக்கும் இந்த வேளையில், ஜனவரி 1-க்குப் பதிலாக ஏன் ஏப்ரல் 1-ஐ இந்தியா தேர்வு செய்துள்ளது என்பதையும் பார்ப்போம்.

ஏப்ரல் 1 எப்படித் தொடக்கப் புள்ளியானது?

இந்தியாவின் தற்போதைய நிதியாண்டு முறை பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து தோன்றியது. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் நிர்வாக மற்றும் கணக்கியல் கட்டமைப்பு முதன்மையாக வருவாய் வசூல் மற்றும் பொது செலவினங்களை நிர்வகிப்பதற்கே வடிவமைக்கப்பட்டது. அப்போது நில வருவாய் தான் அரசாங்கத்தின் மிக முக்கிய வருமானமாக இருந்தது. எனவே அரசின் நிதி நிலைமை என்பது பயிர் சுழற்சி, அறுவடை மற்றும் கிராமப்புற வருமானத்தோடு நேரடியாகப் இணைக்கப்பட்டிருந்தது.

Also Read

வரலாற்று ரீதியாக பார்க்கும்போது இந்திய பொருளாதாரம் விவசாயத்தையே பெரிதும் சார்ந்து இருந்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் பருவமழை காலத்தில் ஜூன்-ஜூலையில் விதைப்பு நடைபெறுகிறது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் அறுவடை நடக்கிறது. மார்ச் இறுதியில் அறுவடை முடிவது நிதியாண்டு முடிவோடு சரியாக பொருந்துகிறது. இதன் மூலம் அரசுக்கு தேவையான நிதியும் கிடைத்து விடுகிறது. இதை வைத்து அடுத்த நிதியாண்டுக்கான நிதி நிலையை திட்டமிட அரசுக்கு உதவுகிறது. இதனால் புதிய கணக்கு சுழற்சியை தொடங்க ஏப்ரல் 1 மிகவும் வசதியான காலமாக இருந்தது.

பிரிட்டனும் அப்படித்தான்?

பிரிட்டனும் ஏப்ரல் மாதத்திலேயே தனது வரி மற்றும் கணக்கியல் சுழற்சியை கொண்டிருந்தது. அந்த நிர்வாக நடைமுறை அப்படியே இந்தியாவிற்கும் கொண்டுவரப்பட்டு, காலப்போக்கில் அரசாங்க பதிவேடுகள் மற்றும் பட்ஜெட் திட்டமிடலில் நிலைபெற்றுவிட்டது. மேலும் ஏப்ரல்-மார்ச் சுழற்சியானது வைசாகி (Vaisakhi) அல்லது இந்து சந்திர நாட்காட்டியின் (Lunar calendar) படி புத்தாண்டு பிறக்கும் காலத்தோடும் ஒத்துப்போகிறது. பல இந்திய மாநிலங்களின் பாரம்பரிய புத்தாண்டு இந்த நேரத்திலேயே தொடங்குகிறது.

சுதந்திரத்திற்கு பிறகும் ஏன் இது தொடர்கிறது?

இந்தியா 1947-க்குப் பிறகும் இந்த முறையில் மாற்றவில்லை. ஏனெனில், சுதந்திரத்திற்குப் பிறகும் இந்தியா விவசாயத்தையே பெரிதும் நம்பியிருந்தது. பருவமழையின் தாக்கம் உணவு விநியோகம், பணவீக்கம் மற்றும் அரசின் திட்டமிடலில் நேரடி பங்கு வகித்தது. இந்த சூழலில் தான் மத்திய பட்ஜெட் ஏப்ரல் 1ல் தொடங்கும் விதமாக தயாரிக்கப்படுகிறது. 2017 முதல் பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1-க்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் ஏப்ரல் 1ம் தேதி நிதியாண்டு தொடங்கும் போதே, நிதி ஒதுக்கீடுகள் அந்தந்த துறைகளுக்கு சென்றடைந்து, நலத்திட்ட பணிகள் தாமதமின்றி தொடங்க வழிவகை செய்யப்பட்டது.

Recommended For You

இந்தியா மட்டுமல்ல, கனடா, நியூசிலாந்து, பிரிட்டன், ஹாங்காங் மற்றும் ஜப்பான் போன்ற பல வளர்ந்த நாடுகளும் இதே ஏப்ரல்-மார்ச் சுழற்சியை பின்பற்றுகின்றன.

ஜனவரி 1-க்கு ஏன் மாறவில்லை?

சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதால் நிதியாண்டை ஜனவரிக்கு மாற்ற வேண்டும் என அவ்வப்போது விவாதங்கள் எழுகின்றன. ஆனால் இந்தியாவின் நிதி அமைப்பு என்பது அழகியல் சார்ந்ததல்ல, அது நிர்வாக தொடர்ச்சி சார்ந்தது. இந்த முறையை மாற்றினால் வரி அமைப்பு, நிறுவனங்களின் தணிக்கை, வங்கி நடைமுறைகள் என அனைத்தையும் மிகப்பெரிய அளவில் மாற்ற வேண்டியிருக்கும். இது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும். இதுவே ஜனவரி 1-க்கு மாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+