இந்திய ரயில்வேயின் பெட்டிகளில் இருக்கும் சீட் மற்றும் பெர்த் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது தெரியுமா? இதற்குப் பின்னால் சில உளவியல் காரணங்கள் இருக்கின்றன. ரயில் பயணம் தான் போக்குவரத்து முறைகளிலேயே மிகவும் மலிவான ஒன்று. இதனால் தான் பெரும்பாலானோர் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர்.அப்படி விருப்பப்பட்டு பயணிக்கும் பயணிகளுக்கு நல்ல ஒரு சூழலை தர வேண்டும், பாதுகாப்பான பயணத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இந்திய ரயில்வே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளது.
கலர் சைக்காலஜி: நிறங்கள் நம்முடைய உள்ளுணர்வையும் மனநிலையையும் மாற்றும் சக்தி கொண்டது. இதைத்தான் கலர் சைக்காலஜி கூறுகிறது. அதாவது ஒரு நிறத்தின் தன்மையை வைத்தே மூளைக்கு சில விஷயங்கள் தெரிய வந்து விடுமாம். நீல நிறம் அமைதி, நிதானம் மற்றும் நம்பகத்தன்மையை குறிக்கிறது.

வானம் மற்றும் கடல் போன்ற இயற்கையான அம்சங்கள் அனைத்தும் நீல நிறத்தில் தான் இருக்கின்றன. எனவே நீண்ட தூரம் ரயிலில் பயணிப்பவர்களுக்கு கண்களுக்கு இதமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீல நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அழுக்கு மற்றும் கறைகள் எளிதில் தெரியாது: தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணிக்கின்றனர். பொருட்களை வைப்பது, இருக்கையில் அமர்வது, உணவு உண்பது போன்ற காரணங்களால் சீட்டில் தூசி மற்றும் கறைகள் படியும் வாய்ப்புள்ளது. லைட் கலர் சீட் கவர் பயன்படுத்தப்பட்டால் இந்தக் கறைகள் பளிச்சென்று தெரியும். இதனால் பிறர் பயன்படுத்தும் போது அவர்களுக்கு அசௌகர்யமாக இருக்கலாம். ஆனால் அடர் நீல நிறத்தில் சீட் இருந்தால் சின்ன சின்ன அழுக்கு மற்றும் கறை வெளியில் தெரியாது. இருந்தாலும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு ரயில்வே தொடர்ந்து இவற்றை சுத்தம் செய்கிறது.
நீண்ட தூர ரயில் பயணங்களுக்கு ஏற்றது: சில நேரம் 15 முதல் 30 மணி நேரம் வரை நீண்ட தூரம் ஒரே பெட்டியில் பயணிகள் அமர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது பயணிகளை சுற்றி இருக்கும் நிறம், வெளிச்சம் மற்றும் இருக்கை வசதிகள் பெரிதும் முக்கியம். சில நிறங்களை பார்ப்பதே தலைவலியை தந்துவிடும். எனவே நீண்ட நேரம் பார்த்தாலும் கண்களுக்கு எந்தவித உறுத்தலும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், கூட்ட நெரிசல் மிகுதியாக இருந்தாலும் ஒரு அமைதியான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நீல நிறம் பயன்படுத்தப்படுகிறது.
நீடித்து உழைக்கும் தன்மை: ரயிலில் இருக்கும் இருக்கைகளை பயணிகள் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். பயணிகளின் நடமாட்டம், அழுத்தம் மற்றும் தூசி காரணமாக விரைவில் நிறம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே நீடித்து உழைக்கும் துணிகளையும் நிறங்களையும் பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் நீல நிறம் சிறந்த தேர்வாக இருந்தது.
அனைத்து ரயில் பெட்டிகளிலும் நீல நிறம் பயன்படுத்தப்படுவதில்லை. சில ஐசிஎஃப் பெட்டிகளில் மட்டுமே நீல நிற இருக்கைகள் காணப்படுகின்றன. ஆனால் நவீன எல்ஹெச்பி மற்றும் வந்தே பாரத் போன்ற ரயில்களில் வேறு நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
