இந்தியாவை பொறுத்தவரை பட்ஜெட் என்றாலே பல்வேறு நடைமுறைகள் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அல்வா கிண்டுவதில் தொடங்கி பொருளாதார ஆய்வறிக்கை சமர்பித்தல் வரை ஆண்டுதோறும் வழிமுறைப்படி பட்ஜெட்டிற்கு முன்பு இவையெல்லாம் கட்டாயம் நடக்கும்.
ஆனால் இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு முந்தைய நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன?: மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
தலைமை பொருளாதார ஆலோசகரின் குழு, நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிதி நிலை என்ன, வருவாய், தொழில்துறை ,வேலைவாய்ப்பு, உற்பத்தி, பணவீக்கம், ஏற்றுமதி- இறக்குமதி விவரங்கள், அன்னிய செலாவணி கையிருப்பு என இந்திய பொருளாதாரம் குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெறும் ஆவணத்தை உருவாக்கும். இது தான் பொருளாதார ஆய்வறிக்கை எனப்படுகிறது.
இதனை கொண்டு பட்ஜெட்டில் என்ன துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பன போன்ற விவரங்களை நாம் கணிக்க முடியும். கடந்த பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளின் நிலை என்ன, வரும் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்ற தகவல்களும் இதில் இடம்பெறும்.
இந்த ஆண்டு ஏன் பொருளாதார ஆய்வறிக்கை இல்லை?: இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் நடக்க உள்ள வேளையில், தற்போது இடைக்கால பட்ஜெட்டே தாக்கலாகிறது. இடைக்கால பட்ஜெட்டிற்கு முன் பொதுவாகவே பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப் படாது.
இது ஒரு முழுமையான பட்ஜெட் இல்லை என்பதால் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படாது என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகளையோ கொள்கை மாற்றங்களையோ எதிர்பார்க்க முடியாது.
முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும்?: பொதுத்தேர்தல் முடிந்து , புதிய அரசு பதவியேற்ற பின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். புதிய அரசு அமைந்து , அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு இலாகாக்கள் ஒதுக்கப்படும். இதற்கு பின் நாடாளுமன்ற முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதற்கு முந்தைய நாள் நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது. கிட்டதட்ட ஜூலை மாதத்தில் இதனை எதிர்பார்க்கலாம்.
பொருளாதார நிலையை எப்படி தான் தெரிந்து கொள்வது?
பொருளாதார ஆய்வறிக்கை வெளியாகாத நிலையில், மத்திய நிதி அமைச்சகம், 'இந்திய பொருளாதாரம் ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் ஓர் ஆவணத்தை வெளியிட்டிருக்கிறது. இதில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
3 ஆண்டுகளில் $5 ட்ரில்லியன் பொருளாதாரம்: மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆவணத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் $5 ட்ரில்லியன் பொருளாதாரமாகவும் , 2030ஆம் ஆண்டில் $7 ட்ரில்லியன் பொருளாதாரமாகவும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3ஆவது ஆண்டாக 2024இல் இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதத்தை ஒட்டி இருக்கும் எனும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications