இந்தியக் குடும்பங்களில் கார்ப்பரேட் வேலையை விட அரசாங்க வேலைக்கு அவ்வளவு மரியாதை. இதனால் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருமானம் பெற முடியும் என்று இன்றளவும் மக்கள் கருதுகின்றனர். இன்னும் சில ஊர்களில் அரசாங்க வேலையில் இருக்கும் மாப்பிள்ளைக்கு தான் தங்கள் மகளை திருமணம் செய்து வைப்பேன் என்ற சபதத்துடன் இருக்கும் பெற்றோர்களும் இருக்கின்றனர்.
இதனாலோ என்னவோ ஒவ்வொரு ஆண்டும் அரசாங்க வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு ரயில்வே குரூப் டி பணியிடங்களுக்கு 32,438 காலி பணியிடங்களை அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு சுமார் 15.6 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தோராயமாக ஒரே ஒரு பணியிடத்திற்கு 48 பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர்.
இப்படி போட்டி போட்டுக் கொண்டு அரசு பணிகளில் சேரும் நபர்களுக்கு பிற பிரச்சனைகளும் இருக்கிறது. தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி பணி நியமனம் முடிவதற்கே 3 முதல் 4 ஆண்டுகள் வரை நேரம் எடுக்கிறது. இதனால் ஒரு சில இளைஞர்கள் அந்தந்த வேலை வாய்ப்புக்கான வயது வரம்பை கடந்து தகுதி இழந்தவராக மாறுகின்றனர். சமீபத்தில் கூட ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு வேலைவாய்ப்புகள் ஏன் தொடர்ந்து குறைந்து வருகிறது?: அரசு வேலை வாய்ப்புகள் குறைவதற்கு 7-வது ஊதியக் குழு ஒரு காரணமாக கூறப்படுகிறது. 2016-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட ஏழாவது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவுகள் பெருமளவு அதிகரித்தது. 2014-ஆம் ஆண்டில் ரூ.1.40 லட்சம் கோடியாக இருந்த ஊழியர்களின் சம்பளம், 2023-ஆம் ஆண்டில் ரூ.2.96 லட்சம் கோடியாக அதிகரித்தது.
ஒரு சிலர் நிதி வல்லுனர்கள் நாட்டின் வருமானம் தொடர்ந்து அதிகரித்தாலும் இந்தியாவின் வரி-ஜிடிபி விகிதம் குறைந்து வருவதால் போதிய அளவு அரசு பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த 35 ஆண்டுகளாக இந்த விகிதம் 17 சதவீதத்திலேயே இருக்கிறது. இதனால் அரசுக்கு போதிய வரி வருவாய் கிடைக்கவில்லை. இதுவும் அரசு பணியிடங்கள் தொடர்ந்து குறைந்து வருவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 61 கோடி. இதில் விவசாயம் செய்பவர்கள், தொழில் செய்பவர்கள் போன்றோரும் அடங்குவர். ஆனால் மாநில அரசு, மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள், ராணுவப் படைகள் என அனைத்தையும் சேர்த்து பார்த்தால் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 2.5 மட்டுமே.
இதில் ராணுவத் துறையை தவிர்த்து விட்டு பார்த்தால் இந்தியாவில் அரசாங்க வேலைகளில் இருப்பவர்களின் பங்கு வெறும் 4 சதவீதம் தான். ஆனால் இன்றளவும் இந்தியாவில் கோடிக்கணக்கான இந்தியர்கள் அரசு பணியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதில் 96 சதவீதம் பேர் தனியார் துறையில் தான் வேலை பார்க்கிறார்கள் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
சம்பள தொகை தொடர்ந்து அதிகரிப்பதால் அரசு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களை அதிகம் நியமித்து வருகின்றன. இதற்காக மத்திய அரசு "கவர்மெண்ட் ஈ-மார்க்கெட் ப்ளேஸ்" என்ற இணையதளத்தை கொண்டு வந்தது. இந்த போர்ட்டல் மூலமாக தற்போது ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 2025-ஆம் நிதியாண்டில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியமர்த்தப்பட்டனர். 2016 ஆம் ஆண்டில் 6 ஊழியர்களில் ஒருவர் மட்டுமே ஒப்பந்த பணியாளராக இருந்தனர். ஆனால் 2026-ஆம் ஆண்டில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேல் ஒப்பந்த ஊழியர்கள் இருக்கின்றனர்.
ஒப்பந்த வேலை குறுகிய காலத்திற்கு நல்லதாக பார்க்கப்பட்டாலும் அதன் பிறகு வேலையிழக்கும் இளைஞர்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது? என்பதுதான் அடுத்த கேள்வியாக எழுகிறது. அதோடு இன்னும் சில துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அரசு வருவாயை அதிகரிக்கும் வழிகளைக் கண்டுபிடித்து இன்னும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வேலை வழங்கப் போகிறதா? அல்லது இந்த பிரச்சனை தொடருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
