பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வீடுகளில் பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டர் விலையை 200 ரூபாய் வரையில் குறைப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இதோடு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் புதிதாக 75 லட்சம் பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
இதன் மூலம் உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச எல்பிஜி சிலிண்டர் இணைப்பை பெறுவோர் எண்ணிக்கை 10.35 கோடி ஆக அதிகரிக்கப்பட உள்ளது. பொதுவாக உஜ்வாலா திட்டத்தின் கீழ் இருப்பவர்கள் சிலிண்டர் வாங்குபவர்களுக்கு 200 ரூபாய் தள்ளுபடி விலையில் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தற்போது அளிக்கப்பட்டு உள்ள 200 ரூபாய் தள்ளுபடியுடன் சேர்த்து மொத்தம் 400 ரூபாய் தள்ளுபடி பெற உள்ளனர் உஜ்வாலா திட்ட பயனாளிகள். மத்திய அரசு கடந்த சில மாதங்களாக கமர்சியல் சிலிண்டர் விலையை மட்டுமே குறைத்தும், உயர்த்தியும் வந்த நிலையில் பல 200 ரூபாய் விலை குறைப்பை முதல் முறையாக வீட்டில் பயன்படுத்தும் domestic LPG cylinder-க்கு குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த திடீர் விலை குறைப்பை அறிவிக்க என்ன காரணம்..? உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயு விலை தடாலடியாக குறைந்துள்ளதா..? வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் LNG விலை பெரிய அளவில் குறைந்துள்ளதா..?
இந்தியாவில் 19 கிலோ எடை கொண்ட கமர்சியல் எல்பிஜி சிலிண்டரின் விலையை கச்சா எண்ணெய் நிறுவனங்கள் ஏப்ரல் மாதம் 91.50 ரூபாயும் ஜூன் மாதம் 83 ரூபாயும், மே மாதம் 172 ரூபாயும் குறைத்தது. இந்த 3 மாத விலை குறைப்பிற்கு பின்பு ஜூலை மாதம் எல்பிஜி சிலிண்டரின் விலை 7 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் விலை குறைய முக்கிய காரணம் பணவீக்கம். தக்காளி விலை உயர்வு வீட்டு சமையல் அறை முதல் நாடாளுமன்றம் வரையில் விவாதிக்கும் முக்கிய பிரச்சனையாக மாறிய நிலையில் 300 ரூபாயாக இருந்த தக்காளி தற்போது 30 முதல் 50 ரூபாயாக குறைந்துள்ளது.
ஆனால் அரசி, கோதுமை போன்ற பிற முக்கிய உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது, இதனால் ஆகஸ்ட் மாதம் மட்டும் அல்லாமல் செப்டம்பர் மாதம் வரையில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்ந்த நிலையில் இதை கட்டுப்படுத்தவே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளதாக கணிக்கப்படுகிறது.
இந்த மாத துவக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என கணிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது. தக்காளி, வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை உயர்வின் காரணமாக ஜூன் மாதம் 4.81 சதவீதமாக இருந்த ரீடைல் பணவீக்கம், ஜூலை மாதத்தில் 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதோடு அடுத்த 7-8 மாதத்தில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது, ஏற்கனவே ராகுல் நடை பயணம், INDIA கூட்டணி என பலவற்றால் பிஜேபியின் வெற்றி பாதிப்புகள் குறைந்துள்ளது, இதற்கு உதாரணம் பிஜேபியின் கோட்டையாக இருந்த கர்நாடக தேர்தல். இந்த நிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநில தேர்தலில் வெற்றிப்பெறவும் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்க கூடும்.
பணவீக்க பாதிப்பை சற்று குறைக்கும் முயற்சியாகவே மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது. ஆனால் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஓணம், ரக்ஷா பந்தன் முன்னிட்டு இந்தியா முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான பெண் சகோதரிகளுக்கு மோடி அளிக்கும் பரிசு என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications