லண்டன்: பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் அதிக சொத்துக்களை வைத்திருக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த உயர்ந்த சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் தங்களது முதலீட்டுக்கு விருப்பமான இடமாக லண்டனை தேர்வு செய்கின்றனர்.
பெரிய தொழிலதிபர்கள் தொடங்கி பாலிவுட் பிரபலங்கள் வரை இந்தியாவை சேர்ந்த பெரும் பணக்காரர்களின் முதலீட்டு நகரமாக லண்டன் ரியல் எஸ்டேட் சந்தை இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பெரும்பாலும் இவர்கள் தங்களது குழந்தைகள் மேற்படிப்புக்காக லண்டனை தேர்வு செய்து அங்குள்ள ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாக சொல்லப்படுகிறது. Sotheby's International Realty நிறுவனத்தின் இயக்குனர் ஆகாஷ் பூரி, இது பற்றி தெரிவிக்கையில் "லண்டனில் உள்ள சொத்து உரிமையாளர்களின் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான். சிலர் பிரிட்டனிலேயே பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர் . மற்றவர்கள் விடுமுறை காலங்களில் வந்து தங்கி செல்வதற்கான இடமாக லண்டனை தேர்வு செய்கின்றனர். சிலர் படிப்புக்காகவும் இங்கே வருகை தருகின்றனர்" என தெரிவிக்கிறார்.
லண்டனில் ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டின் விலை 3.2 கோடி ரூபாயாக இருக்கிறது, அதுவே மூன்று படுக்கையறை கொண்ட வீடு என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும். லண்டனை பொருத்தவரை பெரும்பாலான இந்தியர்கள் மேஃபேர்(Mayfai) , மேரிலபோன் (Marylebone), ஆக்ஸ்போர்ட் சர்க்கஸ் Oxford Circus ஆகிய இடங்களில் தான் ரியல் எஸ்டேட் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு தொழில் விரிவாக்கத்திற்கான வாய்ப்புகளை லண்டன் வழங்குகிறது, அது மட்டும் இன்றி இங்கே சொத்து மதிப்பு நிலையாக உயர்ந்து வருகிறது. மேலும் இங்கு இருக்கக்கூடிய வரி விதிப்பு முறை ,உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவை தான் பெரும்பாலான இந்தியர்கள் லண்டனை நோக்கி வந்து முதலீடு செய்வதற்கு காரணம் ஆகும்.
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகும் லண்டனில் ரியல் எஸ்டேட் சந்தை கணிசமான வளர்ச்சியிலேயே இருக்கிறது என அங்கே செயல்பட்டு வரக்கூடிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான இந்தியர்கள் இங்கே வாடகை வருமானம் ஈட்டும் நோக்கிலும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர். உயர்ந்த சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களுக்கு லண்டனில் வீடு இருப்பது என்பது கௌரவமாக பார்க்கப்படுகிறது.
நைட் ஃபிரான்க் ஆய்வறிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் உயர்ந்த சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டு காலத்தில் 6.1% அதிகரித்துள்ளது. இது சர்வதேச சராசரியான 4.2 %ஐ விட அதிகம். இந்தியாவைப் பொறுத்தவரை 30 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிகர சொத்து மதிப்பு கொண்டவர்கள் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களாக கருதப்படுகின்றனர்.
நைட் ஃபிரான்க் அறிக்கை வெளியிடக்கூடிய தகவலின் அடிப்படையில் இந்தியாவை சேர்ந்த உயர்ந்த சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் தங்களின் சொத்துக்களில் 32 % ஐ குடியிருப்புகள் சார்ந்த ரியல் எஸ்டேட்டில் தான் முதலீடு செய்துள்ளனர்.
அதில் 14 % இந்தியாவிற்கு வெளியே இருக்கிறது என கூறுகிறது. மேலும் இதுபோன்ற உயர்ந்த சொத்து மதிப்பு கொண்ட நபர்களிடம் நைட் ஃபிரான்க் நடத்திய சர்வேயில் கிட்டத்தட்ட 47 % பேர் பிரிட்டனில் இடம் வாங்க விரும்புவதாகவும் 41% பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம் வாங்க விரும்புவதாகவும், 29 % பேர் அமெரிக்காவில் வீடு வாங்க விரும்புவதாகும் தெரிவித்துள்ளனர் .
Story written by: Devika


Click it and Unblock the Notifications