டெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் இந்திய பொருளாதாரத்தை பதம் பார்க்க தொடங்கியுள்ளது. அண்மையில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதன் தாக்கம் உடனடியாக பங்குச்சந்தையில் எதிரொலித்தது.
சர்வதேச அளவில் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்படும் போது அது உலக பொருளாதாரத்தையே பாதிக்கும். குறிப்பாக ஈரான் போன்ற எண்ணெய் வளமிக்க நாடு இது போன்ற பிரச்னைகளில் ஈடுபட்டிருக்கும் போது அதன் தாக்கம் அழுத்தமாக இருக்கும். ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் போரே முடிவுக்கு வராத நிலையில் ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் உலகளவில் ஒரு ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளுடனுமே நல்ல உறவுடன் இருக்கிறது. இந்த பதற்றம் காரணமாக இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகள் பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளன. ஈரான் – இஸ்ரேல் இடையிலான பிரச்னை காரணமாக செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இது இந்தியாவின் விநியோக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை ஈரான் – இஸ்ரேல் பிரச்னை தொடங்கியது முதல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 3% சரிந்துள்ளது. இதனால் பத்திரங்களின் விலை சரியும், நிறுவனங்களுக்கான கடன் செலவுகள் அதிகரிக்கும், கச்சா எண்ணெய் விலை உயரும் , பங்குச்சந்தைகள் சரியும் என இன்ஃபோமெரிக்ஸ் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் சிறப்பு பொருளாதார நிபுணர் மனோரஞ்சன் சர்மா கூறுகிறார்.
ஈரானில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை ஏறி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக் கூடும். இது சாமானியர்களுக்கு தான் பெரும் சுமையாகி போகும். வெள்ளிக்கிழமையன்று ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 90.54 டாலர்கள் என விற்பனையானது. இது மேலும் உயரும் அபாயமுள்ளது. செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து தடை பட்டால் பொருட்கள் பரிமாற்றங்களில் தாமதம், வர்த்தக விலை அதிகரிப்பது ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டு உலக வர்த்தகமே பாதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து 8.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது, அதே போல 2.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.ஈரானுக்கு இந்தியாவில் இருந்து 1.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களும், ஈரானிடம் இருந்து 672 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. தற்போது இவை அனைத்துமே பாதிக்கப்படும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications