அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தகப் போரை தவிர்க்கும் விதமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. புதிதாக அதிபராக பொறுப்பேற்றது முதலே டிரம்ப் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் மத்திய அரசு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பான விவரங்களை அந்நாட்டு அரசு சேகரிக்க தொடங்கியுள்ளது. இதன்படி இந்தியாவை சேர்ந்த சுமார் 18000 பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களை மீண்டும் இந்தியாவிற்கே அனுப்பி வைப்பது என அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக மேற்கு இந்திய மாநிலங்களான பஞ்சாப் மற்றும் குஜராத்தை சேர்ந்த இளைஞர்கள் பலரும் சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு இந்த 18,000 பேரையும் இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கி இருக்கிறது. டிரம்ப் நிர்வாகத்துடன் எந்த ஒரு மோதலும் ஏற்பட கூடாது என்பதில் இந்திய அரசு கவனமாக இருக்கிறது. குறிப்பாக வர்த்தக ரீதியான எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என எண்ணுகிறது. எனவே தான் தாமாகவே முன்வந்து 18000 இந்தியர்களையும் திரும்ப இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
இதற்கு பதிலாக டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் ஹெச்1பி விசா மற்றும் மாணவர் விசாவில் தங்கி இருக்கும் இந்தியர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் நிர்வாகம் பார்த்துக் கொள்ளும் என மத்திய அரசு நம்புகிறது. ஏனெனில் அமெரிக்காவில் 2023 ஆம் ஆண்டு ஹெச்1பி விசா பெற்ற 3,86,000 பேரில் நான்கில் மூன்று பேர் இந்தியர்கள்.
டிரம்ப் தலைமையிலான அரசு இவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அது இரு நாடுகளுக்கு இடையே பெரிய பிரச்சனையை உண்டாக்கும். ஏற்கனவே இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை நிலவி வரும் நிலையில் இவர்கள் இந்தியாவிற்குள் வந்தால் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தான் மத்திய அரசு டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது.
அமெரிக்காவின் எல்லை பாதுகாப்பு முகமை வெளியிட்டுள்ள தரவுகளின் படி பார்க்கும்போது 2024 ஆம் ஆண்டில் முறைகேடாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்தவர்களில் சுமார் 3 சதவீதம் பேர் இந்தியர்கள் என தெரிய வருகிறது. அதிலும் அண்மைக்காலமாக இந்திய இளைஞர்கள் மெக்சிகோ மற்றும் கனடா எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைவது அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த 12 மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 1100 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications