ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வந்துவிட்டால் போதும் இந்தியர்களுக்கு குஷி ஆகிவிடும். காரணம் சித்திரை, வைகாசி தான் மாம்பழ சீசன். நம் நாட்டில் மாம்பழ பிரியர்கள் சற்று அதிகம். அதேபோல அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் மாம்பழங்களை விரும்பி வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் மாம்பழங்களுக்கு 60 டாலர்கள் வரை செலவு செய்கின்றனர். அமெரிக்காவில் இந்திய மாம்பழங்களுக்கு அவ்வளவு டிமாண்ட்.

ஒரு பாக்ஸ் மாம்பழங்களை 60 டாலர்கள் கொடுத்து வாங்கி வருகின்றனர். இந்திய மதிப்பில் பார்த்தால் ஒரு பாக்ஸ் விலை கிட்டத்தட்ட ரூ. 6,000-த்தை நெருங்கும். அந்த அளவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் எமோஷனாக மாறிவிட்டது இந்திய ரக மாம்பழங்கள்.
விற்று தீரும் மாம்பழங்கள்: அமெரிக்காவில் 1 பாக்ஸ் இந்திய மாம்பழங்கள் 50 முதல் 60 டாலர்களுக்கு விற்பனையாகிறது. ஒவ்வொரு பாக்ஸிலும் 10 முதல் 12 மாம்பழங்கள் வரை இருக்கும். 60 டாலர்களைக் கணக்கிட்டு பார்த்தால் ஒரு மாம்பழத்தின் விலையே தோராயமாக 5 முதல் 6 டாலர் வரை இருக்கும். அமெரிக்காவில் உள்ள சில்லரை விற்பனையாளர்கள் கூறுகையில், கேசர் போன்ற மாம்பழ ரகங்கள் பாக்ஸ் ஒன்று 56.99 டாலருக்கும், பிரீமியம் அல்போன்சோ மாம்பழங்கள் 65.99 டாலருக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஒரு மாம்பழம் 6 டாலர் என்றால் இந்திய மதிப்புக்கு தோராயமாக 600 ரூபாய் வரும். விலை இவ்வளவு அதிகமாக இருந்த போதிலும் அமெரிக்கா ஆன்லைன் தளங்களில் மாம்பழ ஸ்டாக் வருவதற்கு முன்பே ஸ்டாக் அவுட் ஆகிவிடுகிறது.
இந்திய மாம்பழங்களுக்கு ஏன் அமெரிக்காவில் இவ்வளவு விலை?: தமிழ்நாட்டின் உள்ளூர் கடைகளில் கிலோ ஒன்று 100 ரூபாய் முதல் 200 ரூபாய்க்குள் விற்பனை செய்யப்படுகிறது. அப்படி இருக்கையில் அமெரிக்காவில் மட்டும் ஒரு மாம்பழத்திற்கு 600 ரூபாய் செலவாகிறதே ஏன்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதன் பின்னால் பல காரணங்கள் உள்ளன.
மாம்பழங்களை எல்லாம் ஏற்றிச் செல்வதற்கான விமான செலவும் இதில் அடங்கும். கிட்டத்தட்ட மாம்பழ விலையில் 30 சதவீதம் ஏர் ஃபிரைட் கட்டணத்திற்கு சென்று விடுகிறது. மாம்பழம் அழுகும் பொருள் என்பதால் கப்பலிலோ அல்லது வேறு ட்ரான்ஸ்போர்ட் மூலமாகவோ கொண்டுவர முடியாது. அதனால் கண்டிப்பாக ஏர் ஃபிரைட் அவசியம். அதோடு எந்த ஒரு பொருள் அமெரிக்காவிற்கு வந்தாலும் அதற்கு பல்வேறு சோதனைகள் மற்றும் தர பரிசோதனைகள் செய்யப்படும். அப்படி செய்யப்படுவதற்கு 10 முதல் 17.4 சதவீதம் வரை செலவாகிறது.
ஒரு வழியாக மாம்பழங்கள் பிளைட் மூலமாக வந்து இறங்கிய பின்னர், அவை விற்பனையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் விற்பனை செய்யப்படும். மாம்பழங்கள் அழுகிப் போவதற்கு முன்பாக அவர்கள் விற்றாக வேண்டும். மாம்பழங்களை குறுகிய கால அவகாசத்தில் விற்பனை செய்ய வேண்டும், அதே சமயம் ஏர் பிரெயிட் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களையும் உள்ளடக்கி, விற்பனையாளர்களுக்கு லாபமும் கிடைக்க வேண்டும் என்பதால்தான் அமெரிக்காவில் கூடுதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஜார்ஜ் புஷ்ஷை அசர வைத்த இந்திய மாம்பழம்: பல ஆண்டுகளாக இந்திய மாம்பழங்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் பிறகு 2006-ஆம் ஆண்டில் தான் அந்த தடை அகற்றப்பட்டது. அதற்கு பின்னால் ஒரு குட்டி ஃப்ளாஷ் பேக் இருக்கிறது. அமெரிக்காவின் அப்போதைய அதிபராக இருந்தவர் ஜார்ஜ் புஷ். அரசியல் பயணத்திற்காக அவர் இந்தியா வந்திருந்தார். ஜார்ஜ் புஷ் வந்த சமயம் இந்தியாவில் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் மன்மோகன் சிங் ஜார்ஜ் புஷ்க்கு ஒரு மாம்பழத்தை கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட ஜார்ஜ் புஷ் "This is a hell of a fruit!" என்று பாராட்டினார். அதன் பின்னர் தான் இந்திய மாம்பழங்கள் படிப்படியாக அமெரிக்காவிற்குள் நுழையத் தொடங்கியது.
மெக்சிகோ மாம்பழங்களை மிஞ்சும் இந்திய மாம்பழங்கள்: அமெரிக்காவிற்கு மிக நெருக்கமான நாடுகளான மெக்சிகோ போன்ற நாடுகளில் இருந்து மாம்பழங்கள் வருகின்றன. அவை அருகில் இருக்கும் நாடு என்பதால் மிகவும் குறைந்த விலையில் மாம்பழங்கள் வருகிறது. இப்படி வருகின்ற மாம்பழங்கள் குறைந்த விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனாலும் இந்திய மாம்பழங்களின் சுவைக்கும் முன்னால் மெக்சிகோ மாம்பழங்களால் போட்டியிட முடியவில்லை. மெக்ஸிகோவில் இந்திய மாம்பழங்களை எல்லாம் டெலிவரி செய்யும் கொரியர் ஊழியர்களே தற்போது அவர்கள் நாட்டுப் பழங்களை விட்டுவிட்டு இந்திய மாம்பழங்களுக்கும் பேன்களாக மாறிவிட்டார்களாம்.


Click it and Unblock the Notifications