சென்னை: பயணிகள் சேவை மற்றும் புதிய ரயில் வரத்து அடிப்படையில், இந்திய ரயில்வே மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்து வருகிறது. மேலும் உலகில் உள்ள மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் இந்தியன் ரயில்வே நெட்வொர்க்கும் ஒன்று. என்னதான் இவ்வளவு வளர்ச்சி பெற்று இருந்தாலும் இந்திய ரயில்வே பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு வரி செலுத்தி வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அதன் விரிவான விவரங்களைப் பார்ப்போம்.
எக்கனாமிக் டைம்ஸ் தரவுகளின் படி, இந்திய ரயில்வே 1951ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. இருந்தாலும் சகுந்தலா எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவதற்காக பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ. 1.2 கோடியை செலுத்தி வருகிறது என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் மக்களால் அதிகம் அறியப்படாத ரயில் பாதை ஒன்று உள்ளது. அது அரசாங்கத்திற்கு சொந்தமானது அல்ல. பிரிட்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது.

சகுந்தலா இரயில்வே, ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்ட யவத்மால் மற்றும் மூர்த்திஜாபூர் இடையே 190 கிமீ நீளமுள்ள குறுகிய ரயில் பாதையாகும். காலனித்துவ (colonial era) காலத்தில், இந்தப் பாதையில் ரயில்கள் மத்திய இந்தியா முழுவதும் இயக்கப்பட்ட கிரேட் இந்தியன் பெனிசுலர் ரயில்வே (GIPR) மூலம் இயக்கப்பட்டன. சகுந்தலா ரயில்வே 1910ஆம் ஆண்டு கில்லிக்-நிக்சன் என்ற தனியார் பிரிட்டிஷ் நிறுவனத்தால் நிறுவப்பட்டது.
1952ஆம் ஆண்டு பெனிசுலர் ரயில்வே தேசியமயமாக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் இந்த ரயில்வே தண்டவாளத்தை அமைத்த நிறுவனம் தான் இன்னும் இதனை பராமரித்து வருகிறது இந்தப் பாதையை மட்டும் அந்த நிறுவனத்திடம் இருந்து பெனிசுலர் ரயில்வே வாங்கவில்லை.
அதில் ஆச்சர்யம் என்னவெனில், தற்போதும் இந்த பிரிட்டிஷ் நிறுவனம் தனது தண்டவாளத்தில் ரயிலை இயக்குவதற்காக, இந்திய ரயில்வே துறையிடம் இருந்து ரூ. 1 கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிறது. சகுந்தலா எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவதற்காக, இந்திய ரயில்வே ஆண்டுக்கு ரூ. 1.2 கோடியை செலுத்தி வருகிறது என்று கூறப்படுகிறது.
யவத்மாலில் இருந்து மும்பைக்கு பருத்தியை எடுத்துச் செல்ல இந்த குறுகிய பாதை கட்டப்பட்டது. அதன் பிறகு தற்போது, பயணிகளை ஏற்றிச் செல்ல இந்தப் பாதை பயன்படுத்தப்படுகிறது.
சகுந்தலா இரயில்வே இன்றும் குறுகிய கேஜ் பாதைகளைத் தான் பயன்படுத்துகிறது மற்றும் தற்போது, இந்த ரயில் அமராவதி மாவட்டத்தில் உள்ள யவத்மால் மற்றும் அச்சல்பூர் இடையே உள்ள 190 கிமீ தூரத்தை கடக்க சுமார் 20 மணி நேரம் ஆகும். இந்த பயணத்திற்கு சுமார் 150 ரூபாய் செலவாகும், எனவே மகாராஷ்டிராவில் உள்ள இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையே பயணிக்கும் ஏழை மக்களுக்கு இந்த ரயில் சேவை உதவிகரமானதாக உள்ளது.


Click it and Unblock the Notifications