டெல்லி: கடந்த சில நாட்களாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் 84.39 ரூபாய் ஆகும். அதாவது ஒரு அமெரிக்க டாலருக்காக நாம் 84.39 ரூபாயை செலவிட வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.
இது இந்திய பொருளாதாரத்தில் குறிப்பாக இந்திய ஏற்றுமதி இறக்குமதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்தடுத்த நாட்களிலும் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவிலேயே இருக்கும் என்கின்றனர் இந்த துறை சார்ந்த நிபுணர்கள். அண்மையில் தான் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வரும் ஜனவரி மாதம் அவர் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்கிறார்.

பதவியேற்ற உடனே அமெரிக்காவில் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 60% என்ற அளவில் உயர்த்த கூடும் என சொல்லப்படுகிறது. சீனா நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வரும் டொனால்ட் டிரம்ப் வர்த்தக இடைவெளியை குறைப்பதற்கு இப்படி ஒரு நடவடிக்கையை எடுப்பார் என கூறுகின்றனர். சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பதன் மூலம் சீன நாணயமான யுவானின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடையும்.
அமெரிக்கா சீனா இடையிலான இந்த வர்த்தக மோதல் இந்தியாவில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் குறிப்பாக இந்திய ரூபாய் மதிப்பில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என பார்க்கும் போது இந்தியா சீனா இடையே மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. அதாவது சீனாவில் இருந்து நாம் அதிக அளவிலான பொருட்களை இறக்குமதி செய்கிறோம், ஆனால் நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பு மிகவும் குறைவு.
உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் இறக்குமதியை சார்ந்திருப்பதை தடுக்கவும் இந்தியா தன்னுடைய ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையிலான இந்த பற்றாக்குறையை சரி செய்வது அவசியம். ஒருவேளை சீனாவின் நாணயம் சரிவடையும் போது இந்திய பொருட்கள் வெளிச்சந்தையில் குறைந்த மதிப்பு கொண்டதாக தோன்றலாம் எனவே இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி கருதுகிறது.
எனவே இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைய சரிவடைய இந்தியாவிலும் ஏற்றுமதி உயரும் என கூறுகின்றனர். ஆனால் அதே வேளையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும்போது நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களின் விலை கண்டிப்பாக உயரும் இதற்காக ரிசர்வ் வங்கி தங்கள் கைவசம் இருக்கும் வெளிநாட்டு கரன்சி கையிருப்பை பயன்படுத்தி பற்றாக்குறையை சரி செய்யும் என சொல்லப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 2023-24 ஆம் நிதி ஆண்டில் இறக்குமதி மதிப்பு 854. 8 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 776.7 பில்லியன் டாலர்கள். இந்தியாவில் இந்த வர்த்தக பற்றாக்குறையை போக்குவதற்கு ரூபாயின் மதிப்பு சரிவடைவது அவசியம் என சொல்லப்படுகிறது. ஆனால் இது அமெரிக்க டாலரை பயன்படுத்தி வாங்கும் பொருட்களின் மதிப்பை உயர செய்யும்.


Click it and Unblock the Notifications