சென்னை: என்னதான் பெரிய கல்வி நிறுவனங்களில் சென்று உயர் படிப்பு படித்தாலும், தனியார் நிறுவனத்தில் அதிக ஊதியத்தில் பணிபுரிந்தாலும் அரசு வேலையில் இருப்பது தனி கெத்தாக பார்க்கப்படுகிறது. பெற்றோரே கூட தங்களுடைய குழந்தைகளுக்கு அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என கூறி தான் வளர்க்கிறார்கள்.
எனவே தான் மாநில அளவிலும் சரி மத்திய அளவிலும் சரி அரசு வேலை வாய்ப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடும் போதெல்லாம் சொற்பமான பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானவர்கள் போட்டியிடுவதை நாம் காண முடிகிறது.

உதாரணமாக ஹரியானாவில் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 40,000 பட்டதாரிகள் இந்த பணிக்காக விண்ணப்பம் செய்திருந்தனர். அதேபோல உத்திரபிரதேச மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு சுமார் 60 ஆயிரம் பணியிடங்களுக்கு 50 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
அரசு துறைகளில் ஒரு ஓட்டுநர் தொடங்கி உதவியாளர் வரை சாதாரண பணி ,குறைவான ஊதியம் என்றால் கூட அதற்கான போட்டி அதிகமாகவே இருக்கிறது. ஆயிரக்கணக்கில் இருக்கும் வேலை வாய்ப்புகளுக்கு லட்சக்கணக்கானவர்கள் போட்டியிடுகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் அரசு வேலைகளில் கிடைக்க கூடிய பணி பாதுகாப்பு மற்றும் பிற பலன்களாகும். இந்தியாவை பொறுத்தவரை உயர் படிப்பினை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே இவர்கள் எப்படியாவது ஒரு அரசாங்க வேலையை பெற்று விட வேண்டும் என நினைக்கின்றனர் .
சர்வதேச பணியாளர் அமைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை மிக தீவிரமாக இருக்கிறது எனக் கூறி இருந்தது. அதாவது இந்தியாவில் வேலை செய்யக்கூடிய வயதில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 97.2 கோடி இவர்களில் 58.6 கோடி பேர் மட்டுமே வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என அந்த அறிக்கை கூறுகிறது. இதில் அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை 1.4 கோடியாகும். அதாவது 100 வேலையில் இரண்டு வேலை மட்டுமே அரசு வேலையாக இருக்கிறது.
அரசு வேலை வாய்ப்புகளை பொருத்தவரை நுழைவு நிலையிலேயே குறைந்தபட்சம் 30000 வரை மாத ஊதியம் கிடைத்து விடுகிறது. அது மட்டும் இன்றி வீட்டு வாடகை அலோவென்ஸ், அகவிலைப்படி, ஊதியத்துடன் கூடிய விடுப்பு என பல்வேறு பலன்களும் கிடைக்கின்றன.
எனவே தான் ஏராளமானவர்கள் அரசு வேலைகளை நோக்கி செல்கின்றனர். தனியார் நிறுவனங்களில் அதிக ஊதியத்தில் வேலை கிடைத்தாலும் பணி சூழல்கள் என்பது மிக மோசமானதாக இருக்கிறது மற்றும் தனியார் வேலை நிலையானதாக இருக்காது.
இந்த பிரச்சனையை போக்குவதற்கு அரசு வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைப் போல உற்பத்தி துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை அரசுத்துறையில் இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அது மட்டும் இன்றி கல்வி தரத்தை மேம்படுத்துவது, தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடங்களை மாற்றி அமைப்பது, சேவை துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது ஆகியவை உதவியாக இருக்கும் என்கின்றனர்.
யுனிவர்சல் அன்எம்ப்ளாய்மென்ட் பெனிஃபிட் சிஸ்டம் (universal unemployment benefit system) என்பதை நடைமுறைக்கு கொண்டு வரும்போது பெரும்பாலானவர்கள் அரசு வேலைகளை நம்பி இருப்பது குறையும் எனவும் இதன் மூலம் இந்தியாவின் வேலை வாய்ப்பு சந்தை சமநிலை பெறும் என்றும் சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications