இந்தியர்கள் ஏன் பணக்காரர்களை வெறுக்கின்றனர், இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது. அண்மையில் ஸெரோதா தளத்தின் நிறுவனரான நிதின் காமத் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்தியாவில் ஏன் பணக்காரர்கள் வெறுக்கப்படுகிறார்கள் என்பதற்கு பதில் அளித்தார். அமெரிக்காவைப் போல இந்தியாவில் பணக்காரர்கள் ஏன் கொண்டாடப்படுவதில்லை என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நிதின் காமத் அமெரிக்கா ஒரு தூய்மையான முதலாளித்துவ சமூகம் என்றும், இந்தியா ஒரு சோசியலிச ஆனால் முதலாளித்துவமாக நடிக்கும் சமூகம் என்றும் கூறினார். அதாவது நாம் அனைவரும் சோசியலிஸ்ட்கள் என்று தெரிவித்தார்.

செல்வத்தின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை இந்தியாவில் பணக்காரர்கள் வெறுக்கப்படுவதை மாற்ற முடியாது என்றார். இதனிடையே ஆர்பிஜே குழுமத்தின் தலைவரும் இந்திய பெரும் பணக்காரர்களில் ஒருவருமான ஹர்ஷ் கோயன்கா இந்த வீடியோவினை பதிவிட்டு இந்தியர்கள் ஏன் பணக்காரர்களை வெறுக்கிறார்கள் என்பது குறித்த தன்னுடைய பார்வையை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்தியர்கள் ரத்தன் டாடா, ஆனந்த் மகேந்திரா , அசிம் பிரேம்ஜி உள்ளிட்டோரை விரும்புகின்றனர் அவர்களும் பெரும் பணக்காரர்கள் தான். ஆனால் மக்கள் அவர்களை விரும்ப காரணம் அவர்களின் பணிவு, சமூகநலன் சார்ந்த நன்கொடைகள் மற்றும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகள் என கூறியுள்ளார்.
இங்கே பணம் இருப்பது பிரச்சனை அல்ல அந்த பணத்தை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், தங்களை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது என தெரிவித்துள்ள ஹர்ஷ் கோயன்கா ஊழலில் ஈடுபடுவது, சமூக நலனை யோசிக்காமல் தன்னுடைய தனிப்பட்ட நலனை மட்டுமே சிந்திப்பது உள்ளிட்ட குணாதிசயங்களைக் கொண்ட பணக்காரர்களை மக்கள் வெறுக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் தன்னுடைய செல்வத்தின் மூலம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் பணக்காரர்கள் மற்றும் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக தன்னுடைய சொத்தை பயன்படுத்தும் பணக்காரர்கள் மக்களால் விரும்பப்படுகிறார்கள் மற்றும் கொண்டாடப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரால் வரவேற்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஹர்ஷ் கோயன்காவின் பதிவுக்கு எதிர்மறையான கருத்துக்களையும் பலரும் பின்னூட்டங்களாக பதிவு செய்து வருகின்றனர். பணக்காரர்களால் அவர்களின் பணத்தை அவர்களுக்கு பிடித்த வழிகளில் எல்லாம் பயன்படுத்த முடிகிறது, ஆனால் ஏழை மக்களால் அது முடிவதில்லை இதுவே வெறுப்புக்கு காரணம் என ஒரு பயனர் கூறியுள்ளார். ஒருவரது செல்வம் எப்பொழுது சமூகத்திற்கு நன்மை பயக்கிறதோ அப்போது தான் மக்கள் அவரை விரும்புகின்றனர் சிலர் பயனர்கள் கூறுகின்றனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications