உலகளவில் பல நாடுகளும் தங்கள் நாட்டில் வந்து ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களுக்கும், குறிப்பிட்ட ஆண்டு காலம் தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கும் கோல்டன் விசாக்களை வழங்குகின்றன. இவ்வாறு கோல்டன் விசா பெற்றவர்கள் அந்த நாடுகளுக்கு எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.
இந்த கோல்டன் விசா நடைமுறையை பயன்படுத்தி பெரும்பாலான பணக்கார இந்தியர்கள் வெளிநாடுகளில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது தெரிய வந்துள்ளது. இதன்படி இந்தியாவை சேர்ந்த பெரும்பணக்காரர்கள் கிரீஸ், துருக்கி, கரீபிய நாடுகள் ,மால்டா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அதிக அளவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து கோல்டன் விசா பெறுவதாக தெரிகிறது. இந்த திட்டங்கள் இந்தியாவை சேர்ந்த பெரும் பணக்காரர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.

குறிப்பாக எளிமையாக இந்த நாடுகளுக்கு அவர்களால் பயணம் செய்து வர முடிகிறது, அங்கே குடியேற முடிகிறது, சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது, இரண்டாவது தாய்நாடாக மாறுகிறது மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டின் மூலம் லாபம் தருகிறது என்கிறார் இத்துறையை சேர்ந்த ஷாலினி லம்பா.
குறிப்பாக ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் கோல்டன் விசா கிடைக்கும் நாடுகளில் முதலீடு செய்கிறார்களாம். இவ்வாறு கோல்டன் விசா பெறுவதன் மூலம் ஒரு நபரால் அவருடைய முதலீட்டினை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற முடிகிறது என்பது இதில் இருக்கும் சாதகம்.
மேலும் சர்வதேச அளவில் குறிப்பிட்ட நாடுகளுக்கு எளிமையாக சென்று வர முடிகிறது, அவர்களின் வாழ்க்கை நிலை மாறுகிறது, எதிர்காலத்தில் அவர்களின் சந்ததியினர் குறிப்பிட்ட நாடுகளில் சென்று படிப்பையோ அல்லது தொழிலையோ தொடர முடியும். இது ஒரு இரண்டாவது வீடாக இந்தியர்களுக்கு செயல்படுவதாக அவர் கூறுகிறார். மேலும் அந்த நாடுகளில் இவர்களுக்கு சிறந்த வரி பாதுகாப்பும் கிடைப்பதாக சொல்கிறார்.
இந்தியாவை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் துபாயில் தான் அதிகளவில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்கிறார்கள். அடுத்ததாக கிரீஸ் நாட்டில் இவ்வாறு ரியல் எஸ்டேட் முதலீடின் மூலம் கோல்டன் விசாவை பெறுவது இந்தியர்களின் விருப்பமாக இருக்கிறதாம்.
இங்கே 2.50 லட்சம் யூரோக்களை முதலீடு செய்து 7 ஆண்டுகள் அங்கே வசித்தால் குடியுரிமையே கிடைத்து விடுகிறது. அடுத்ததாக துருக்கி தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய ரியல் எஸ்டேட் சந்தையாக இருக்கிறது. இங்கே 4 லட்சம் டாலருக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு சிறப்பு விசா வழங்கப்படுகிறது.
கரீபியன் நாடுகளில் ஏதேனும் ஒன்றில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்தால் அனைத்து நாடுகளுக்கும் எளிதாக பயணம் செய்ய முடியும் . இங்கே ரியல் எஸ்டேட் துறையில் 2 லட்சம் டாலருக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. மால்டாவில் 1 லட்சம் டாலருக்கு மேல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்பவர்களுக்கு எளிமையாக குடியுரிமை வழங்கப்படுகிறது.
ஸ்பெயின் பிரதானமான ரியல் எஸ்டேட் சந்தையாக இருக்கிறது. இங்கே குறைந்தபட்சம் 5 லட்சம் யூரோக்களை முதலீடு செய்ய வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் தொடர்ந்து அங்கே வசித்து வந்தால் குடியுரிமை பெறுவது எளிதாகிவிடும்.
முன்னதாக அயர்லாந்து , போர்ச்சுகல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இப்படி கோல்டன் விசா திட்டத்தை நடைமுறைப்படுத்தி வந்தன ஆனால் பின்னாளில் அவற்றை நிறுத்திவிட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தை பொருத்தவரை அங்கே ரியல் எஸ்டேட் முதலீடு செய்பவர்கள் முழுமையான குடியுரிமை பெற முடியாது என்றால் கூட அவர்கள் நீண்ட காலம் அங்கே தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்தியர்களை பொறுத்தவரை கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பின்னரே பெரிய அளவில் வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள் என தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications