டெல்லி: இந்தியாவில் அரசு வேலைகளுக்கு இருக்கக்கூடிய ஒரு மவுசு எந்த காலத்திலும் குறையாது. ஏனெனில் அரசாங்க வேலை வாங்கி விட வேண்டும் அல்லது வீட்டில் ஒருவராவது அரசு வேலையில் சேர்ந்திட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான இந்திய குடும்பங்களின் எண்ணமாக இருக்கிறது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு படித்து அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்பதை சொல்லி தான் ஊக்குவிப்பார்கள். இதன் காரணமாகவே இந்தியாவில் அரசு பணிகளுக்கான போட்டி என்பது மிக அதிகமாக இருக்கிறது.

யுபிஎஸ்சி, தமிழ்நாடு சார்பில் நடத்தப்படக்கூடிய டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் ஒரு பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்வுகள் மிகக் கடினமானதாகவும் இருக்கும். அதேபோல போலீஸ் கான்ஸ்டபிள் போன்ற அரசு பணிகளுக்கும் லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
அண்மையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 60,000 காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியானது 48 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதுவே நமக்கு இந்தியாவில் அரசாங்க வேலை மீதான மோகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டும்.
இதை புரிந்து கொள்வதற்கு நாம் இந்தியாவில் பணியாளர் சந்தை குறித்து தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி வேலை செய்யும் வயதில் அதாவது 15 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 972 மில்லியன்.
இவர்களில் 586 மில்லியன் இந்தியர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் ஆர்கனைஸ்டு செக்டார் எனப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட துறைகளான தனியார் மற்றும் அரசு துறை பணிகளில் 152 மில்லியன் பேர் வேலை செய்கின்றனர்.
இதில் மத்திய மற்றும் மாநில அரசு வேலைகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை 14 மில்லியன் ஆகும். அதாவது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நூறு வேலைகளிலும் இரண்டு வேலை அரசாங்க வேலையாக இருக்கிறது.
இந்தியாவில் வேலை செய்ய தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆனால் அரசு வேலை மிகவும் குறைவு. தனியார் துறைகளில் கிடைக்கும் வேலைகளில் மாத ஊதியம் மற்றும் பிற பலன்கள் வழங்கப்படுகின்றன.
இருப்பினும் பணிச்சூழலோ , அரசு வேலையில் கிடைப்பதை போன்ற பலன்களையோ இங்கே எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக ஊதியத்துடனான விடுப்பு என்பது கனவு தான்.
இந்தியாவில் 430 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முறைசாரா தொழில்களில் இருக்கின்றனர். வீட்டு வேலை மற்றும் சுய தொழில் என்பன உள்ளிட்ட பல இதில் அடங்கும். ஊதியம் என பார்க்கும் போது குறைந்த பணித்திறன் கொண்ட ஒருவர் அரசு வேலையில் ஜூனியர் அளவில் நுழைந்தாலே குறைந்தபட்சம் 30,000 மாத ஊதியம் மற்றும் வீட்டு வாடகை படி, அகவிலைப்படி ஆகியவை கிடைத்துவிடும். இதுவே தனியார் துறையில் இதே நபருக்கு 10,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது.
அரசு வேலையில் இருக்கும் பணி பாதுகாப்பை தனியார் வேலையில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாது, தனியார் துறையில் எப்பொழுது வேண்டுமானாலும் நமது வேலை பறிபோக கூடும் . இந்த காரணங்களால் தான் இந்தியர்கள் நிரந்தர பணி என்றால் அது அரசாங்க பணி தான் என நினைக்கின்றனர்.
இந்த நிலையை சரி செய்ய இந்தியாவில் உற்பத்தி சார்ந்த துறைகளை அதிகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டும் இன்றி கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் குறிப்பாக தொழில்நுட்ப கல்வி மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர். தனியார் துறைகளில் பணியாளர் நலன் சார்ந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.
Story written by : Devika


Click it and Unblock the Notifications