இஸ்ரேல் - ஈரான் போர் துவங்கிய பின் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு துறையை கண்காணிக்கும் சந்தை ஆய்வாளர்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விரைவில் பீப்பாய்க்கு $95 ஐ எட்டக்கூடும் என எச்சரித்துள்ளனர். மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தாண்டி வேறு எந்த துறைகளுக்கு எல்லாம் பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
இஸ்ரேல் - ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை ஏன் உயர்கிறது..?: கச்சா எண்ணெய்யின் விலை என்பது உங்கள் காரில் எரிபொருள் நிரப்ப எவ்வளவு செலவாகும் என்பதில் இருந்து பல்பொருள் அங்காடியில் உணவுப் பொருட்களின் விலை வரை அனைத்தையும் பாதிக்கிறது. தற்போது இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

ஈரான் என்பது உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர் நாடுகளில் ஒன்றாகும். எனவே, இந்த போர் காரணமாக அந்த பகுதியில் எண்ணெய் உற்பத்தி அல்லது கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இது உலக சந்தையில் எண்ணெய் குறைவாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி, விலையை அதிகரிக்க வைக்கிறது.
இந்தியா - ஈரான் மத்தியிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் எவ்வளவு..?: இந்தியா - ஈரான் இடையேயான கச்சா எண்ணெய் வர்த்தகம் தற்போது மிகக் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு முதலே பெரும்பாலான இறக்குமதிகள் நிறுத்தப்பட்டன. கடந்த 2024ஆம் ஆண்டில், இந்தியா ஈரானில் இருந்து மொத்த இறக்குமதி (கச்சா எண்ணெய் உட்பட) கிட்டத்தட்ட $1.06 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி) அளவாக இருந்தது. 2010இல், இந்தியா எண்ணெய் இறக்குமதியில் ஈரானுக்கு 9 - 16% பங்கு வழங்கியது. இருப்பினும், 2019இல் அமெரிக்க செயல்பாட்டு தடைகள் காரணமாக இது பெரும்பாலும் நிறுத்தப்பட்டது.

ஹார்முஸ் நீரிணையின் முக்கியத்துவம் என்ன..?: ஓமன் மற்றும் ஈரான் இடையே அமைந்துள்ள ஒரு முக்கிய நீர்வழிப்பாதை ஹார்முஸ் ஜலசந்தி ஆகும். இது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கு முக்கியமான கடல் பாதையாக இருக்கிறது. எனவே, அதன் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை உலக பொருளாதாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகளால் எண்ணெய் வயல்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு உலகளவில் நுகரப்படும் அதிக அளவு கச்சா எண்ணெய் இந்த ஜலசந்தி வழியாக செல்கிறது.
இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயருமா..?: இந்தியா தனது பெரும்பாலான எண்ணெய் தேவைகளுக்கு மத்திய கிழக்கையே நம்பியுள்ளது. கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேரடியாக அதிகரிக்கும். மேலும் இஸ்ரேல் - ஈரான், ரஷ்யா - உக்ரைன் மோதல் அதிகரித்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டால், பெட்ரோல் - டீசல் விலைகளில் மாற்றம் ஏற்படலாம்.

அதேபோல் பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசின் ஒத்திகை வரியும், மாநில வாட் வரி அதிக பங்கு வகிக்கின்றன. அரசு வரிகளை குறைத்தால்தான் விலை குறையும். இல்லையென்றால் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்திய ரூபாய் மதிப்பு குறையும்போது, எண்ணெய் இறக்குமதி விலை அதிகரிக்கும். இதனால் பெட்ரோல் - டீசல் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் எந்தெந்த துறைகள் பாதிக்கும்..?: கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி சார்ந்த நாடுகளில் பல துறைகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, அதை சுத்திகரித்து பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி போன்ற எரிபொருட்களை விற்பனை செய்கின்றன.
எனவே, கச்சா எண்ணெய் விலை உயரும்போது, அவற்றின் உள்ளீட்டு செலவுகள் உயர்கின்றன. மேலும் டயர் தொழில்துறை, விமான போக்குவரத்து, போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ், இரசாயனங்கள் மற்றும் பெட்ரோக்கெமிக்கல்கள், மின்சார உற்பத்தி மற்றும் மொத்த பொருளாதாரமுமே பாதிக்கப்படும்.

கப்பல் போக்குவரத்துக்கு தடை : எண்ணெய் டாலரிலேயே வர்த்தகம் செய்யப்படும். டாலர் விலை குறைந்தால், எண்ணெய் விலை மற்ற நாணயங்களில் உயரும் அபாயம் உள்ளது. பங்குச் சந்தை, பணவீக்கம் போன்ற சூழ்நிலைகளில் முதலீட்டாளர்கள் எண்ணெய், தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றனர். இதனால் கூட எண்ணெய் விலை மேலும் உயரும். கப்பல் போக்குவரத்து தடைகள், பூகம்பம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் எண்ணெய் விலை அதிகரிக்கும்.
ஜவுளித்துறையில் தாக்கம் : கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஜவுளி மற்றும் பெயிண்ட் தொழில்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெட்ரோலியத்தில் இருந்து பெறப்படும் மூலப்பொருட்களை அவர்கள் அதிகமாக நம்பியிருப்பதால், பாதிக்கப்படுகின்றனர்.
அதாவது பாலியஸ்டர், நைலான், அக்ரிலிக் மற்றும் பாலிப்ரொப்பிலீன் ஆகியவை கச்சா எண்ணெய்யில் இருந்து நேரடியாகப் பெறப்படும் முக்கிய செயற்கை இழைகள் ஆகும். கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் அதிகரிப்பு இந்த மூலப்பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பெயிண்ட் தொழில் பாதிப்பு : பெயிண்ட் தொழில், கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறது. ஏனென்றால், அதன் மூலப்பொருட்களில் கணிசமான பகுதி கச்சா எண்ணெய் வழித்தோன்றல்கள் ஆகும். கரைப்பான்கள், ரெசின்கள் (பித்தாலிக் அன்ஹைட்ரைடு, பென்டாஎரித்ரிட்டால், மெத்தில் மெதக்ரிலேட் ) மற்றும் பல்வேறு சேர்க்கைகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பெட்ரோலிய அடிப்படையிலான மூலப்பொருட்கள் பெயிண்ட் உற்பத்திக்கு முக்கியமானவையாக உள்ளது.
பிளாஸ்டிக், மருந்துகள் உற்பத்தி பாதிப்பு : முழு பெட்ரோக்கெமிக்கல் துறையும், தங்களது முக்கியமான உள்ளீடாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகின்றன. இதன் மூலம் பிளாஸ்டிக், செயற்கை நார்கள், உரங்கள், மருந்துகள், பாலிமர்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்திகள் அனைத்து தொழில்துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள், ஒரே நேரத்தில் பல துறைகளில் சுற்றுச்சுழலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மின் உற்பத்தி : இந்தியா மின்சாரத்திற்காக நிலக்கரியை பெரிதும் நம்பியிருந்தாலும், சில ஆலைகள் உலை எண்ணெயைப் பயன்படுத்தி வருகின்றன. மேலும், கச்சா எண்ணெய் விலைகள் உயரும்போது, ஒட்டுமொத்த எரிசக்தி செலவுகளை அதிகரிக்கக்கூடும்.
பயனடையக்கூடிய தொழில்கள் : ONGC மற்றும் ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்கள் அதிக கச்சா எண்ணெய் விலைகளால் பயனடைகின்றன. ஏனெனில், அவர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை சர்வதேச விலைக்கு விற்கும்போது அவர்களின் வருவாய் மற்றும் லாபம் அதிகரிக்கிறது.
இந்தியாவுக்கான பொருளாதார தாக்கம் : கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் பாதிக்கிறது. ஏனெனில், இந்தியா எண்ணெய் இறக்குமதியை அதிகமாக நம்பியுள்ளது. இருப்பினும், சில தொழில்கள் கச்சா எண்ணெயை மூலப்பொருளாகவோ அல்லது முக்கிய எரிபொருள் மூலமாகவோ நேரடியாகச் சார்ந்திருப்பதால் மற்றவற்றை விட நேரடியாகவும் கடுமையாகவும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், முழுப் பொருளாதாரமும் பாதிக்கப்படும். அதேபோல், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCகள்), பெயிண்ட்கள், டயர்கள், விமானப் போக்குவரத்து மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ்/கெமிக்கல்ஸ் தொழில்கள் உள்ளிட்டவை நேரடியாக பாதிக்கப்படும். ஏனெனில், அவை முதன்மை மூலப்பொருளாக எண்ணெய்யை நேரடியாகச் சார்ந்து இருக்கிறது.
சமையல் எண்ணெய் விலை நிலவரம்: கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. விலை எவ்வளவு உயர்ந்தாலும், சமையல் எண்ணெய்யை பயன்படுத்தாத சாமானியர் இங்கு இருந்து விட முடியாது. சமீபத்தில் தான் கச்சா பாமாயில், கச்சா சூரியகாந்தி, கச்சா சோயாபீன் எண்ணெய் மீதான அடிப்படை சுங்கவரியை மத்திய அரசு, 20%இல் இருந்து 10%ஆக குறைத்து உத்தரவிட்டது. இதனால் பாமாயில், சூரியகாந்தி போன்ற சமையல் எண்ணெய் விலையும் இப்போது கணிசமாக குறைந்திருக்கிறது. ஆனால், தேங்காய் எண்ணெய் விலை தான் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.400 வரை விற்பனையாவதாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

இந்த ஏரியாவுல எந்த கப்பல் நுழைஞ்சாலும் தட்டி தூக்குவோம்!! ஈரான் மிரட்டலால் ஸ்தம்பித்த உலக நாடுகள்!!

வரலாறு திரும்புமா? 300% வரை எகிறிய ஆயில் விலை! ஈரான் புரட்சி முதல் லிபிய போர் வரை: விரிவான அலசல்!

அதிரவைக்கும் $10 ஆயில் ஸ்பைக்! மார்ஜின் அழுத்தத்தில் சிக்கப்போகும் நிறுவனங்கள்? எப்படி தப்பிப்பது?

ஈரான் போரால் இந்திய பொருளாதாரத்திற்கு கெட்ட செய்தி!! நாளைக்கு பெரிய சூறாவளியே இருக்கு!!

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

ஏசியன் பெயிண்ட்ஸ் முதல் இண்டிகோ வரை.. சரசரவென சரியும் பங்குகள்! முதலீட்டாளர்கள் தப்பிப்பது எப்படி?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications