தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் தனது முதலீடுகளை பில்லியன் கணக்கில் அதிகரித்து வரும் அதே வேளையில், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 3%க்கும் குறைவானதாகும்.
கடந்த ஆண்டு 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிறகு மைக்ரோசாப்ட் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய அளவிலான பணிநீக்கம் இதுவாகும். முன்னதாக ஜனவரி மாத தொடக்கத்தில் சில ஊழியர்கள் செயல்திறன் காரணங்களுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய பணிநீக்கங்களுக்கு சம்மந்தம் இல்லை என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிகத்தின் எதிர்காலம் என்று நம்பப்படும் AI துறையில் அதிக முதலீடு செய்து வருகின்றன. அதே நேரத்தில், செலவுகளைக் குறைக்கும் நோக்கில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மாறிவரும் சந்தையில் வெற்றியைப் பெற நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்த தேவையான நிறுவன மாற்றங்களை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 228,000 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். நிறுவனம் தற்போது புதிய மற்றும் மிக முக்கியமான பணிப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காக தனது ஊழியர்களை மறுசீரமைத்து வருகிறது. இதேபோன்ற நடவடிக்கையாக, கூகுள் நிறுவனமும் செலவுகளைக் குறைத்து AI மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்துவதற்காக கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
AI தொழில்நுட்பத்திற்கான முதலீடு அதிக செலவுடையதாக இருந்தாலும், அதில் அபாயங்களும் அதிகளவில் உள்ளன. மைக்ரோசாப்டின் கிளவுட் தளமான அஸூர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டாலும், அதன் AI அமைப்புகளை உருவாக்குவதற்கான செலவு நிறுவனத்தின் லாபத்தை கணிசமாக குறைத்து வருகிறது. நான்காவது காலாண்டில், மைக்ரோசாப்டின் கிளவுட் லாப வரம்பு 69% ஆகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 72% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 80 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீட்டின் பெரும்பகுதி AI கருவிகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்குத் தேவையான கூடுதல் தரவு மையங்களை உருவாக்குவதற்காக செலவிடப்படவுள்ளது.
டிஏ டேவிட்சன் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆய்வாளர் கில் லூரியா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த பணிநீக்கங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது AI முதலீடுகளால் ஏற்படும் வருவாய் அழுத்தத்தை சமாளிக்க கடுமையாக முயற்சிப்பதையே காட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மைக்ரோசாப்ட் தற்போதைய நிலைகளில் முதலீடு செய்யும் போது, அதன் மூலதனச் செலவுகள் காரணமாக ஏற்படும் அதிக தேய்மான நிலைகளை ஈடுசெய்ய குறைந்தபட்சம் 10,000 பணியாளர்களைக் குறைக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications