சென்னை: ஈரான் இஸ்ரேல் இடையிலான மோதல் தமிழ்நாட்டை சேர்ந்த விவசாயிகளுக்கு பெரிய அளவிலான வருவாய் இழப்பை இழப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக இஸ்ரேல் கடந்த 12 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தது, ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்க ராணுவமும் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டது. தற்போதைக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருந்தாலும் இந்த 12 நாட்களாக நடந்த மோதல்கள் தமிழ்நாட்டை சேர்ந்த மாம்பழ விவசாயிகளுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. போதிய மழை காரணமாக இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் மாம்பழ விளைச்சல் அமோகமாக இருந்தது. ஆனால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை. ஏனெனில் ஈரான் இஸ்ரேல் இடையிலான மோதல்கள் மாம்பழம் ஏற்றுமதியில் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தர்மபுரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 1.46 லட்சம் பரப்பளவில் இந்த ஆண்டு 9.5 லட்சம் டன்களுக்கு மாம்பழம் விளைச்சல் நடந்திருப்பதாக தி பெடரல் இணையதளம் வெளியிடும் செய்தி குறிப்பிடுகிறது. வழக்கமாக 6 லட்சம் டன்களுக்கு மட்டும் தான் மாம்பழ விளைச்சல் இருக்கும் ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிகமாகவே மாம்பழம் விளைந்து இருக்கிறது.
ஏற்கனவே கூடுதல் விளைச்சல் காரணமாக மாம்பழத்தின் கொள்முதல் விலை குறைந்திருந்த நிலையில், ஈரான் இஸ்ரேல் மோதல் காரணமாக ஏற்பட்ட ஏற்றுமதி தடை இன்னும் கொள்முதல் விலையை குறைத்திருப்பதாக விவசாயிகள் தி பெடரலுக்கு அளித்த பேட்டியில் கூறுகின்றனர். செந்தூரா, அல்போன்சா உள்ளிட்ட மாம்பழங்களை நிறுவனங்களும், ஏஜெண்டுகளும் கிலோவிற்கு 10 லிருந்து 12 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதேபோல ஜூஸ் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மாம்பழங்கள் ஒரு கிலோ 4 ரூபாய்க்கே கொள்முதல் செய்யப்படுகிறது என்கின்றனர். இது தாங்கள் செய்த செலவை கூட திரும்ப வழங்காது என வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் இருந்து அதிக அளவு மாம்பழ கூழ் இறக்குமதி செய்யும் நாடு ஈரான். ஆனால் ஈரான் இஸ்ரேல் மோதல் காரணமாக அந்த நாடு தற்காலிகமாக இறக்குமதயை நிறுத்தி வைத்திருக்கிறது. இது மாம்பழ விவசாயிகளை நேரடியாக பாதித்திருக்கிறது. ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக சரக்கு கட்டணங்கள் உயர்ந்தது, தற்போது ஈரானும் இறக்குமதியை நிறுத்தியது என பல காரணங்களை கூறி நிறுவனங்கள் மாம்பழங்களை வாங்க மறுப்பதாக கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டத்திற்கான மாம்பழ கூழ் உற்பத்தி கூட்டமைப்பின் செயலாளர் மாதவன் தெரிவித்திருக்கிறார்.
உலகளவில் ஜூஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் 70% மாம்பழ கூழ் இந்தியாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது ஆனால் மாம்பழ கூழ் மீது 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு மாற்றாக மெக்சிகோ, தென் அமெரிக்கா நாடுகளில் இருந்து மாம்பழங்களை கொள்முதல் செய்ய தொடங்கி விட்டன என மாதவன் பேட்டியில் கூறியுள்ளார். மாம்பழத்திற்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும், மாம்பழ கூழ் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும், மாம்பழ வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications