பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுனரிடம் இந்தியில் பேசுங்கள் என கட்டாயப்படுத்தி சர்ச்சையில் சிக்கிய இளைஞர் தற்போது கன்னட மொழியில் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
இந்தியாவின் ஐடி மையமாகவும் , ஸ்டார்ட் அப் தலைநகரமாகவும் இருக்கிறது பெங்களூரு. இங்கே பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் பலரும் பணிபுரிகின்றனர். இருந்தாலும் இங்கே மொழி சார்ந்த சர்ச்சைகள் அவ்வப்போது எழுகின்றன. கன்னட மொழி பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடைகளின் பலகைகளில் கன்னட மொழியில் பெயர் இருக்க வேண்டும் என்ற உத்தரவும் அமலில் இருக்கிறது.

இந்த சூழலில் ஒரு இளைஞர் ஆட்டோ ஓட்டுனரிடம் மொழி தொடர்பான வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த இளைஞர் ஆட்டோ ஓட்டுநரிடம் நீங்கள் இந்தி மொழியில் பேசுங்கள் என கூறுகிறார், ஆனால் அதனை பொருட்படுத்தாத ஆட்டோ ஓட்டுநர் கன்னடாவில் பேசுகிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. ஆட்டோ ஓட்டுநர் கன்னட மொழியில் பேசுவது இந்த இளைஞர் இந்தியில் பேசுமாறு வாக்குவாதம் செய்வது பெங்களூருவாசிகள் மத்தியில் வேகமாக பரவியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் மொழி தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் அதே இளைஞர் இரண்டு தினங்களுக்கு பின்னர் கன்னட மொழியில் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் மக்களின் உணர்வுகளை தாக்கும் வகையில் தன்னுடைய பேச்சு இருந்திருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கூறுகிறேன் என அவர் கன்னட மொழியில் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
மேலும் இந்தியாவின் ஐடி மையமான பெங்களூரில் கடந்த ஒன்பதாண்டு காலமாக தான் வசித்து வருவதாகவும் இந்த நகரம் தனக்கு பல விஷயங்களை தந்திருக்கிறது என்றும் கூறி நன்றி தெரிவித்து இருக்கிறார் அந்த இளைஞர். தன் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய காவல் நிலையத்திற்கு சென்று இந்த விஷயத்திற்காக தான் மன்னிப்பு கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிகழ்வு குறித்து தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார். ஒரு சிலர் அவருடைய இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளனர். ஒரு சிலர் கட்டாயப்படுத்தி காவல்துறையினர் அவரை மன்னிப்பு கூறி பேச வைத்து வீடியோ வெளியீடு செய்திருப்பதாக கூறி இருக்கின்றனர். சிலர் நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் உங்களுக்கு வாழ்க்கை தந்த ஊரையும் அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தையும் மதிக்க கற்று கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications